Published : 22 Feb 2019 07:09 PM
Last Updated : 22 Feb 2019 07:09 PM

உன் உடல் அமைப்புக்கு பந்து வீச்சில் இன்னும் வேகம் கூட்ட வேண்டும்: விஜய் சங்கருக்கு அறிவுறுத்திய தோனி

இந்திய அணிக்கு ஆடிவரும் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், தோனி தனக்கு வழங்கிய ஆலோசனைகள், அவரது பேட்டிங்கைப் பார்த்துக் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தோனியுடனான பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:

 

ஹேமில்டன் ஒருநாள் போட்டியில் நான், தோனி இருவரும் ஆடவில்லை, அப்போதுதான் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் கூறினார், ‘உன்னுடைய பேட்டிங், பீல்டிங் குறித்து ஒருவருக்கும் ஐயம் இல்லை. ஆனால் நீ இப்போது வீசுவதை விட இன்னும் கொஞ்சம் வேகமாக வீச வேண்டும் என்று நான் உணர்கிறேன். அதுவும் உனக்கு இருக்கும் உடல் அமைப்புக்கு இன்னும் கொஞ்சம் வேகம் கூட்ட வேண்டும்.

 

பிறகு உன் பவுலிங்கில் கொஞ்சம் வலு கூடும், பழைய பந்திலும் ஸ்விங் செய்ய முடியும். சில விஷயங்களை சரி செய்து பவுலிங்கில் இன்னும் மேம்பட முடிந்தால் அணிக்க்கு நீ நல்ல ஒரு சேர்க்கையை அளிப்பாய்’ என்றார். உண்மையில் தோனியைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

 

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் ஆடிய விதத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்றாலும் அடிக்க முடியும். அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு அடிக்க முடியாது, ஒரு பவுண்டரியே போதும் என்று அவர் ஆடிய விதத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.

 

அவர் விரட்டலை எளிதாக்குவார், அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரியும். 44வது ஓவரில் அவரும் கேதார் ஜாதவ்வும் ஒரு ரன்னையே எடுத்தனர், ஆனாலும் கவலைப்படவில்லை. ஓவருக்கு 10 ரன்கள் அடிக்க  முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும் ஆனால் விக்கெட்டை இழக்கக் கூடாது என்று ஆடினார்கள். மற்ற வீரர்களாக இருந்தால் ஆடம் ஸாம்பாவை அடிக்கப் போய் ரன்களும் வந்திருக்கலாம் அல்லது அவுட்டும் ஆகியிருக்கலாம்.

 

ஒரு ரன் தான் எடுத்திருக்கிறோம் ஆனாலும் வெற்றி பெறுவோம் என்று அவர் ஆடுவது உண்மையில் வேற லெவல். சூழ்நிலையின் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொண்டேன்.

 

இவ்வாறு கூறினார் விஜய் சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x