Published : 22 Feb 2019 06:00 PM
Last Updated : 22 Feb 2019 06:00 PM

தோனி அவுட் ஆனவுடன் பதற்றம், வெறுமை: விஜய் சங்கர் பேட்டி

கொழும்பு நிதாஹஸ் ட்ராபியில் தினேஷ் கார்த்திக் தன் அதிரடி மூலம் இந்திய அணியை டி20 கோப்பையை வெல்ல வைத்த அந்தப் போட்டியில் 4 டாட்பால்களுடன் டென்ஷன் ஏற்றிய விஜய் சங்கர் மீண்டும் தான் இந்திய அணியில் நுழைவது கடினம் என்று அப்போது நினைத்திருப்பார்.

 

ரசிகர்கள் விஜய் சங்கரை கடுமையாகச் சாடினர், ட்விட்டரில் கேலி செய்தனர், ஆனால் இன்று உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான தன் தகுதியை அவர் உயர்த்திக் கொண்டுள்ளார்.

 

இன்று அவர் படித்த பள்ளியின் விழாவில் அவருக்கு ஏகபோக வரவேற்பு பார்க்கும் இடங்களிலெல்லாம் அவரிடம் கையெழுத்து கேட்கும் இளம் ரசிகர்கள் என்று விஜய் சங்கர் வளர்ந்திருக்கிறார்.

 

இந்நிலையில் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தன்னை அணியில் மீண்டும் நிர்வாகம் தேர்வு செய்ததற்கான காரணங்கள் பற்றியும் நியூஸிலாந்து தொடர் பற்றியும் கூறிய போது, “நியூஸிலாந்து தொடரில் என்னை சற்று முன்பாக களமிறக்கிய போதே நினைத்தேன் என்னை பேட்ஸ்மெனாகவே அணி நிர்வாகம் கருதுகிறது என்று.

 

குறிப்பாக வெலிங்டன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 18/4 என்று இருந்த போது நான் இறங்கினேன், அதிக ஓவர்கள் மீதமிருந்தன, நான் ஓரளவுக்கு நன்றாகவே ஆடினேன் (45 ரன்கள்)

 

பிறகு ஹாமில்டன் டி20 யில் கேப்டன் ரோஹித் சர்மா என்னை 3ம் நிலையில் இறங்கத் தயாராக இரு என்றார். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.  நிதாஹஸ் இறுதிப் போட்டிக்கு பிறகும் முன்பாகவும் தூக்கமில்லாத இரவுகளைச் சந்தித்தேன், அதன் பிறகு நான் என் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டேன்.

 

வெலிங்டன் ஒருநாள் போட்டியில் நான் 7 அல்லது 8ம் நிலையில் இறங்க வேண்டும். ஆனால் 15 அல்லது 16/3 என்று அணி சரிவில் இருந்த போது என்னை கால்காப்பை அணியச் சொன்னார்கள். தோனி ஆட்டமிழந்தவுடன் களமிறங்குவது என்பது பதற்றமான ஒரு தருணம்.

 

எனக்கு எதுவும் தோன்றவில்லை, வெறுமையாக உணர்ந்தேன். ஆனால் ஒருவர் வெறுமையாக உணரும்போதுதான் அவரிடமிருந்து சிறந்தவை வரும் என்றனர். பிட்சில் கொஞ்சம் ஈர்ப்பதம் இருந்தது, பவுன்சும் மாறி மாறி இருந்தது. நல்ல சவால், நானும் ராயுடுவும் 100 ரன்கள் கிட்டத்தட்ட சேர்த்தோம் (98 ரன்கள்)

 

நான் 45 ரன்கள் எடுத்த போது அணி வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு வைத்தோம் என்ற திருப்தி இருந்தது. அந்த 45 ரன்கள் நான் தடுப்பாட்டத்திலும் கூட நம்பிக்கையுடன் ஆட முடியும் என்பதை என் மனதில் ஏற்படுத்தியது.

 

அப்படிப்பட்ட பிட்சில் மணிகு 145 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு எதிராக தன்னம்பிக்கை மிக முக்கியமானது. அதன் பிறகே நான் என் மீது அதிக நம்பிக்கைக் கொள்ளத் தொடங்கினேன்” என்றார் விஜய் சங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x