Published : 20 Feb 2019 10:50 AM
Last Updated : 20 Feb 2019 10:50 AM

லாரஸ் விருது வென்றார் ஜோகோவிச்: இந்தியாவில் செயல்பட்டு வரும் யுவா அமைப்புக்கும் விருது

பிரபல டென்னிஸ் நட்சத்திர வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 4-வது முறையாக லாரஸ் விருதை வென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், அணிகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு உயரிய விருதான லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் சிறந்த வீரருக்கான விருதை டென்னிஸ் நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தட்டிச் சென்றார். இந்த விருதை வெல்வதற்கான பட்டியலில் பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிளியான் பாப்பே, கென்யாவை சேர்ந்த மாரத்தான் பந்தய வீரர் எலியட் கிபோகேஜ், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் பின்னுத்

தள்ளி 4-வது முறையாக விருதை தட்டிச் சென்றுள்ளார் ஜோகோவிச்.

முழங்கை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு களத்துக்கு திரும்பிய ஜோகோவிச் கடைசியாக நடைபெற்ற 3 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருந்தார். விருதை பெற்ற பின்னர் ஜோகோவிச் கூறுகையில், “கடந்த ஆண்டு எனக்கு நம்ப முடியாத வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. காயத்தில் இருந்து திரும்பிய நிலையில் விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றதை என்னால் என்றும் மறக்க முடியாது. விருதை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. லாரியஸ் அகாடமி வழங்கி வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்றார்.

சிறந்த வீராங்கனைக்கான விருது அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பில்ஸுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சிமோன் பில்ஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அணிக்கான விருதை உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி தட்டிச் சென்றது. திருப்பு முனையை ஏற்படுத்தியவருக்கான விருது, ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் நவோமி ஒசாகா, செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 வயதான ஒசாகா கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். லாரியஸ் விருதை பெறும் முதல் ஜப்பானியர் என்ற பெருமையையும் ஒசாகா பெற்றுள்ளார். சிறந்த கம்-பேக் வீரருக்கான விருதை அமெரிக்காவின் கோஃல்ப் வீரர் டைகர்வுட்ஸ் கைப்பற்றினார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில்தான் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இடம் பெற்றிருந்தார்.

எனினும் விருது தேர்வுக்குழுவினர் டைகர்வுட்ஸை தேர்வு செய்தனர். வாழ்நாள் சாதனையாளர் விருது ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் அர்சென் வெங்கருக்கு வழங்கப்பட்டது. ஆர்சனல் அணியில் வெங்கர் 22 ஆண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. விதிவிலக்கான சாதனை விருதை கென்யா நாட்டின் மாரத்தான் பந்தய வீரர் எலியட் கிபோகேஜ் பெற்றார்.

‘சிறந்த விருது’ பிரிவில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் யுவா அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பானது பின்தங்கிய சமூகத்தில் உள்ள இளம் பெண்களின் வாழ்க்கையை கால்பந்து விளையாட்டு மூலம் மேம்படுத்தும் பணிகளை ஜார்க்கண்ட் பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் லாரஸ் விருதை நீத்தா குமாரி, ஹேமா குமாரி, கோனிகா குமாரி, ராதா குமாரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x