Published : 12 Feb 2019 05:24 PM
Last Updated : 12 Feb 2019 05:24 PM

நான் நலமாக இருக்கிறேன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா

கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில் பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற வீரருமான சுரேஷ் ரெய்னா, கார் விபத்தில் இறந்துவிட்டதாக வந்திகள் பரவின. அது தொடர்பாக யூடியூப்பில் பல்வேறு வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக போலிச் செய்திகள் வெளியாகின. இந்த விஷயம் சுரேஷ் ரெய்னாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்தி வெளியாகி வருகிறது.

நான் கார் விபத்தில் இறந்துவிட்டதுபோன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகளை தவிர்த்துவிடுங்கள்.

இறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன். என்னைப் பற்றி தவறாகச் செய்தி வெளியிட்ட யுடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு ரெய்னா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கலம், பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆகியோர் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதன்பின் அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x