Published : 11 Feb 2019 09:35 PM
Last Updated : 11 Feb 2019 09:35 PM

வீரர்களுக்கு அவர் நல்ல தலைவர், கிரிக்கெட் உத்தி ரீதியாக பெரிய கேப்டன் இல்லை: கோலி பற்றி ஷேன் வார்ன்

உலக கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்த கேப்டனெல்லாம் இல்லை, ஆனால் வீரர்களை வழிநடத்துவதில் அவர் சிறந்த தலைவராக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து லெஜண்ட் ஷேன் வார்ன் பேட்டியளித்துள்ளார்.

 

அதாவது கிரிக்கெட் உத்தி ரீதியாக கேன் வில்லியம்சன், டிம் பெய்ன் சிறந்த கேப்டன்கள் என்கிறார் ஷேன் வார்ன்.

 

தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஷேன் வார்ன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

இப்போதைக்கு அணியின் தலைவராக அவர் சிறப்பாக செயல்படுகிறார்.  கேப்டன்சி உத்திகளுக்கும் அணியின் தலைவராக இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. நான் விராட் கோலியின் மிகப்பெரிய விசிறிதான். கிரிக்கெட் ஆட்டத்தின் இப்போதைய கிரேட் அவர். அணியை நன்றாக வழிநடத்துகிறார். ஆனால் உத்தி ரீதியாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் இவரை விட சிறந்தவர்கள்.

 

தனித்துவமான கேப்டன்கள் இருக்கிறார்களா என்பதைக் கூறுவது கடினம். ஆனால் இப்போதைக்கு வீரர்களின் தலைவர் என்றால் அது விராட் கோலிதான்.

 

தோனி தற்போது அணியில் இருக்கிறார், சூழ்நிலைக்கேற்ப அவர் 4,5, 6 என்று எந்த இடத்திலும் களமிறங்குவார். என்னைப் பொறுத்தவரை அவர்தான் அணியின் விக்கெட் கீப்பர். உலகக்கோப்பையை வெல்ல அவர் அனுபவம் முக்கியம். இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில் பெரிய வீரர்களான கோலி, ரோஹித், தோனி ஆகியோர் சிறப்பாக ஆட வேண்டும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா இன்னும் நன்றாக வீச வேண்டும்.

 

என்னைப் பொறுத்தவரை உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரண்டு அணிகள் இங்கிலாந்தும், இந்தியாவும்தான். ஆஸ்திரேலியா அணி நல்ல அணியுடன் இறங்கினால் வாய்ப்புள்ளது, ஸ்மித், வார்னர் நிறைய நிரூபிக்க வேண்டியுள்ளது, இவர்களுடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ், டார்சி ஷார்ட், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரும் நிரூபிக்க ஆவலுடன் உள்ளனர். உலகக்கோப்பையை வெல்ல ஆஸி.யிடம் அணி உள்ளது. அவர்கள் ஆச்சரியமேற்படுத்த முடியும். ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

 

நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன், இந்தியாவுக்காக அவர் 3 வடிவங்களிலும் அவர் ஆடாவிட்டால் எனக்கு ஏமாற்றமாக இருக்கும். எந்த ஒரு நாட்டிலும் அவர் போன்ற சிறந்த இளம் வீரரை நான் பார்த்ததில்லை. வரும் ஐபிஎல் தொடரில் தொடர் நாயகனாக அவர் வருவார். ஜெயதேவ் உனாட்கட்டை மீண்டும் கொண்டு வருவது ஒரு நல்ல தேர்வு, ஷ்ரேயஸ் கோபால், கிருஷ்ணா கவுதம் நல்ல தேர்வு.

 

டாப் ஆர்டரில் ரஹானே, திரிபாதி, பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகவே ராஜஸ்தான் ராயல்ஸ் வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

 

இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x