Published : 11 Feb 2019 12:06 PM
Last Updated : 11 Feb 2019 12:06 PM

நீங்கள் தோனியாகிவிட முடியாது: தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நீங்கள் என்னதான் முயன்றாலும் தோனியாகிவிட முடியாது என்று தினேஷ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் காரணம் என்ற ரீதியில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஹேமில்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

இலங்கையில் நடந்த நிடாஹஸ் கோப்பை டி20 தொடரில் ஏற்பட்டதுபோன்ற சூழல் நேற்றைய ஆட்டத்தில் இருந்தது. ஆனால், முடிவு மட்டும் மாறிவிட்டது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் காட்டடி அடித்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான இந்த இறுதிஆட்டம் தலைகீழாக மாறிவிட்டது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இரு ரன்கள் எடுத்த நிலையில், 4 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கார்த்திக், குர்னல் பாண்டியா களத்தில் இருந்தனர். ஆனால், பந்தை அடித்த கார்த்திக் ஒரு ரன் எடுத்து, ஸ்டிரைக்கை குர்னல் பாண்டியாவிடம் வழங்கி இருக்கலாம். ஆனால், ஸ்டிரைக்கை குர்னல் பாண்டியாவிடம் வழங்காமல் தொடர்ந்து பேட் செய்தபின்பே ஒரு ரன் எடுத்தார். அதன்பின் கடைசிப் பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர் அடித்தார் தினேஷ் கார்த்திக்.

ஒருவேளை ஸ்ட்ரைக்கை குர்னல் பாண்டியாவிடம் கொடுத்திருந்தால், அவர் சிக்ஸரோ அல்லது பவுண்டரியோ அடித்திருந்தால், ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். ஆனால், தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமலும், குர்னல் பாண்டியாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்காதது விமர்சனத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தைப் பார்த்த வர்ணனையாளராக இருந்த கவுதம் கம்பீரும் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பொறுப்பை பகிர வேண்டும், ஒருவனே பொறுப்பை சுமக்க நினைக்கக் கூடாது, தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து, குர்னல் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்றார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

'தினேஷ் கார்த்திக் இனி இந்திய அணிக்காக விளையாடக் கூடாது. நான் பார்த்தவகையில் மிக மோசமான பேட்டிங்' என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

'இக்கட்டான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்காமல் கிரிக்கெட்டில் இருப்பது முட்டாள்தனமானது' என்று ஒருவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் ஒருரன் சேர்க்காமல், குர்னலுக்கு வாய்ப்பளிக்காததால் என் ரத்தம் கொதித்துவிட்டது. இதன் காரணமாகத்தான் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்க மறுக்கிறார்கள். உள்நாட்டுப்போட்டியில் விளையாடுவதற்கும், வங்கதேசத்துக்கு எதிராக விளையாடவும் மட்டுமே தினேஷ் தகுதியானவர். கள சூழலை புரிந்துகொள்ளாத வீரர் தினேஷ். என்னதான் விளையாடினாலும், தோனியின் பக்கத்தில் கூட வரமுடியாது' என்று ஒரு ரசிகர் வறுத்தெடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x