Published : 23 Jan 2019 12:22 PM
Last Updated : 23 Jan 2019 12:22 PM

கரம் கொடுத்த சிஎஸ்கே: உயிருக்குப் போராடும் கிரிக்கெட் வீரருக்கு நிதிஉதவி

கார் விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடி வரும் பரோடா கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான ஜேக்கப் மார்டின் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பரோடாவைச் சேர்ந்தவருமான ஜேக்கப் மார்டின் கடந்த மாதம் 28-ம் தேதி கார்விபத்தில் படுகாயமடைந்தார். தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு மார்டின் ஜேக்கப் உயிருக்குப் போராடி வருகிறார். நாள் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை சிகிச்சைக்காக தேவைப்படுகிறது.

இதையடுத்து ஜேக்கப் மார்டின் மனைவி, பிசிசிஐ நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு உதவும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பிசிசிஐ நிர்வாகம் ரூ.5 லட்சமும், பரோடா கிரிக்கெட் அமைப்பு ரூ.3 லட்சமும் அளித்துள்ளது.

மருத்துவச் செலவு அதிகமாகும் என்பதால் என்ன செய்வது என்று மார்டின் மனைவி தவித்து வந்தார். இந்நிலையில், ஊடகங்கள் மூலம் தனது சகவீரர் உயிருக்குப் போராடுவதை அறிந்த கங்குலி உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், முனாப் படேல், யுசுப் பதான், இர்பான் பதான் ஆகியோர் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.ஜேக்கப் மார்ட்டினுக்கு தேவையான உதவிகளைத் திரட்டும் பணியில் பிசிசிஐ முன்னாள் செயலாளர் சஞ்சய் படேல் செய்து வருகிறார்.

இந்நிலையில், படேலைச் சந்தித்த இந்திய வீரர் குருணால் பாண்டியா, தொகை நிரப்பப்படாத காசோலையை அளித்து உதவியுள்ளார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் ஜேக்கப் மார்டினுக்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ரூ.3 லட்சம் நிதியுதவியை கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ஜேக்கப் மார்டினுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாங்கள் பரோடா கிரிக்கெட் சங்கத்திடம் பேசியுள்ளோம். அவர் விரைவாக குணமடைந்த சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x