Published : 22 Jan 2019 03:56 PM
Last Updated : 22 Jan 2019 03:56 PM

இந்த முறை அப்படியெல்லாம் ஆகாது: நியூஸி. ஒருநாள் தொடர் குறித்து விராட் கோலி

நியூஸிலாந்துக்கு எதிராக நாளை (புதன்) நேப்பியரில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது, மொத்தம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இது. கடந்த முறை இங்கு தோனி கேப்டன்சியில் 5 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் தோற்று ஒரு போட்டியை டை செய்தது இந்திய அணி.

 

இந்த முறையும் நியூஸிலாந்து அணி அவர்கள் மண்ணில் தாதாகிரிகள்தான். இந்திய அணிக்கு எப்போதும் நியூசிலாந்து ஒரு பெரிய தலைவலித் தொடர்தான். மைதானங்கள் கோணல் மாணலாக இருக்கும், தோனியே ஒருமுறை வழக்கமாக பாயிண்டில் நிறுத்த வேண்டியிருந்தால் இங்கு கவரில் நிறுத்தினால்தான் பாயிண்ட் நிலையாகும் என்று நியூஸி. மைதானத்தின் கோணல் மாணலைக் கேலி செய்திருந்தார். மேலும் அங்கு பயங்கர காற்று அடிக்கும். இது பேட்ஸ்மென்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.

 

இந்நிலையில் விராட் கோலி அளித்த பேட்டி வருமாறு:

 

கடந்த நியூஸிலாந்தில் நாங்கள் ஆடிய போது நிறைய விஷயங்களைப் பார்த்தோம். அதன் வகைமாதிரி, எதிரணியினர் எங்களை நோக்கி குறிவைக்கும் இலக்கு என்று பார்த்திருக்கிறோம்.

 

அப்போது கூட்டணியாகச் சேர்ந்து ஆடுவது பற்றிய பேட்டிங் ஒருங்கிணைவு இல்லாத அனுபவமற்ற அணியாக இருந்தோம். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு பேட்டிங் குழுவாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளோம்.  இப்போது எங்கள் திறமை என்னவென்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

 

நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக 300 ரன்களுக்கும் மேல் அடிக்கக் கூடிய அணி, ஆகவே ஸ்கோர் போர்டில் 300+ இலக்கைப் பார்த்தவுடன் பதற்றமடைதல் கூடாது. பேட்டின் குழுவாக இணைந்து கூட்டணி அமைத்து பதற்றமடையாமல் ஆட வேண்டும், அதே போல்தான் இலக்கு நிர்ணயிக்கும் போதும் 300+ இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

 

கடந்த முறை எங்களிடம் பொறுமை நிதானம் இல்லை, அதாவது ரிலாக்சாக 300ஐ விரட்டும் மனநிலையில் இல்லாமல் இருந்தோம்.

 

இங்கு பெரும்பாலான மைதானங்களில் பக்கவாட்டு எல்லைக்கோடுகள் தூரம் குறைவானவை. அந்த பகுதியை இலக்கு வைக்க வேண்டும். ஆனால் பவுலர்கள் தவறு செய்ய முடியாத ஒரு இடமாகும் இது.  பசுந்தரை பிட்சாக இல்லாத பட்சத்தில் எந்த இடத்தில் வீசுவது என்பதில் துல்லியம் தேவை. நன்றாக ஆடும் அணி நியூஸிலாந்தில் வெற்றி பெறும்.

 

பேட்ஸ்மெனாகவும் கேப்டனாகவும் இருப்பதால் எதிரணி பேட்ஸ்மென்கள் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்கள் என்பதை உள்ளுணர்வு கூறுகிறது. நான் அவர்கள் இடத்தில் என்னை வைத்துப் பார்ப்பேன், இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்வேன், அதை எதிரணி பேட்ஸ்மெனும் செய்யலாம் அல்லவா? சிங்கிள் எடுப்பேனா, அல்லது அடித்து ஆடி இறுக்கத்தைத் தளர்த்துவேனா என்று மனதில் ஓடுவதை செயல்படுத்துவேன். இதை உலகின் எல்லா கேப்டன்களுமே செய்வர், ஆகவே கேப்டனாக இருப்பதில் இதில் ஒரு சவுகரியம் உள்ளது.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x