Last Updated : 22 Jan, 2019 11:13 AM

 

Published : 22 Jan 2019 11:13 AM
Last Updated : 22 Jan 2019 11:13 AM

என்ன நடந்திட்டு இருக்கு?, ஸ்கோர் செய்தும் பயனில்லையா?- ஆஸி.வாரியத்தை வறுத்தெடுத்த மாத்யூ வாட்

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக ஸ்கோர் செய்தும் பயனில்லை, அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும், தேர்வு வாரியத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை மாத்யூ வாட் வறுத்தெடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான மாத்யூ வாட் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2 சதங்களையும், ஒருநாள் போட்டியில் ஒரு சதமும் அடித்துள்ளார். ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பின் மாத்யூ வாட் அணிக்குத் தேர்வாகவில்லை.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த குர்திஸ் பாட்டர்ஸன் தேர்வு செய்யப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் ஹோபர்ட் ஹரிகன்ஸ் அணியில் மாத்யூ இடம் பெற்று விளையாடி வருகிறார். சிட்னியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மாத்யூ வாட் 49 பந்துகளில் 84 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார்.

இந்த ஆண்டு கோடை கால சீசனில் உள்நாட்டுப் போட்டியில் ஆயிரம் ரன்களை மாத்யூ வாட் எட்டினார். மேலும், உள்நாட்டில் மிகப்பிரபலமான ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டியிலும் முன்னணி ரன் சேர்ப்பு வீரராக மாத்யூ வாட் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து மாத்யூ வாட், ஆஸ்திரேலிய வாரியத்தை வறுத்தெடுத்து காட்டமாகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கிரிக்கெட் ஆஸி.லெவன் அணியில் இரு சதம் அடித்த குர்திக் பாட்டர்ஸன் அணிக்குத் தேர்வு செய்துள்ளதை அறிந்தேன். நான் உள்நாட்டுப் போட்டியில் இந்த சீசனில் ஆயிரம் ரன்களை எட்டி இருக்கிறேன். தொடர்ந்து இரு சதம் அடித்த வீரரைத் தேர்வு செய்தோம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது.

அப்படியென்றால், உள்நாட்டுப் போட்டிகளிலும், ஷெப்பீல்ட் போட்டியிலும் ரன்களைக் சேர்த்த எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது.

ஆஸ்திரேலிய தேர்வு வாரியத்தில் என்ன நடக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை. நான் சிறப்பாக ஸ்கோர் செய்தும் என்னை அணிக்குத் தேர்வு செய்யாதது என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது. ஒருபுறம் ஒரு வீரரைப் பற்றி புகழ்ந்துவிட்டு மறுபுறம் மற்றொரு வீரரை அணியில் தேர்வு செய்து எந்தவிதத்தில் நியாயம். உங்களின் அணித் தேர்வு வரையறை எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்.

நான் என்னை மட்டும் குறிப்பிடவில்லை, எனக்காக மட்டும் பேசவில்லை. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு அணியிலும் உள்ள கிரிக்கெட் வீரருக்காக இதைக் கூறுகிறேன். சதம் அடித்த வீரர்கள், ஸ்கோர் செய்த வீரர்கள்தான் தேர்வு செய்கிறோம் என்றால், எனக்குத்தானே முன்னுரிமை அளிக்க வேண்டும், அதைச் செய்திருக்க வேண்டும். அப்போது அது உங்கள் வரைமுறை இல்லை என்றால், மற்ற வீரர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள் எனக் கூறுங்கள்

இவ்வாறு மாத்யூ வாட் தெரிவித்தார்

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் மாத்யூ வாட் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் தொடரிலும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஆரோன் பிஞ்ச் அணியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x