Published : 21 Jan 2019 12:38 PM
Last Updated : 21 Jan 2019 12:38 PM

இந்திய அணிக்குப் புகழாரம்; 1980கள் மே.இ.தீவுகள் அணியைப் போன்று கோலி படை: சிலாகித்த முன்னாள் ஆஸி. வீரர்

இந்திய அணியின் திறமையையும், விளையாடும் பாணியையும் பார்க்கும் போது, கடந்த 1980களில் உலக கிரிக்கெட்டுக்கு சவால்விடும் வகையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் போன்று காட்சி அளிக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 1980களில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரிக்கெட்டில் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. விவ் ரிச்சார்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மோன்ட் ஹெயின்ஸ், ஜெப் துஜான், வேகப்பந்துவீச்சாளர்கள் மால்கம் மார்ஷல், ஜியோல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், அம்புரோஸ், வால்ஷ் ஆகியோர் இருந்தனர். அந்த அணிக்கு ஒப்பீடாக இப்போதுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி20 தொடரைச் சமன் செய்தது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அடுத்ததாக நியூசிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்கச் சென்றுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் திறமையையும், களத்தில் வீரர்கள் விளையாட்டையும் பார்த்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

''இப்போதுள்ள ஆவேசமான இந்திய அணியைப் பார்க்கும் போது, கடந்த 1980களிலும், 1990களிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.

அப்போது இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் இப்போதுள்ள இந்திய அணிக்கு இருக்கும் ஆவேசம், துடிப்பு இருந்தது. கிரிக்கெட் உலகமே அப்போது மே.இ.தீவுகள் அணியைப் பார்த்து அஞ்சியது. தாங்கள் சந்தித்த ஒவ்வொரு அணியையும் வென்றார்கள், தங்களின் தடங்களைப் பதித்து வந்தார்கள். அதேபோன்றுதான் இப்போதுள்ள இந்திய அணியும் இருக்கிறது.

இந்திய அணியின் ஆஸ்திரேலியப் பயணம் மிகச்சிறப்பான பயணமாக அமைந்திருக்கிறது. பெர்த் நகரில் விளையாடிய டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியின் ஆட்டமும், வீரர்களின் செயல்பாடும் புகழுக்குரியது. இந்தப் பயணத்தில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பைச் செய்து, முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளார்கள்''.

இவ்வாறு டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x