Published : 15 Jan 2019 04:12 PM
Last Updated : 15 Jan 2019 04:12 PM

ரோஹித் சர்மா புதிய மைல்கல்: கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர்கள் அடித்த மே.இ.தீவுகள் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய போதிலும் அந்தப் போட்டியில் இந்திய அணி 34 ரன்களில் தோல்வி அடைந்தது.

அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் 52 பந்துகளுக்கு 43 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரோஹித் கணக்கில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள்அடித்ததன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்ஸர்கள் அடித்து, ஒரு அணிக்கு எதிராக தனி வீரர் ஒருவர் அடித்த அதிக சிக்ஸர் என்ற பெருமையை வைத்திருந்திருந்தார்.

ஆனால், கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 89 சிக்ஸர்கள் அடித்து ஒரு அணிக்கு எதிராக சர்வதேச அரங்கில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதுவரை எந்த ஒரு வீரரும் ஒரு அணிக்கு எதிராக இந்த எண்ணிக்கையில் சிக்ஸர்கள் அடித்தது இல்லை. ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஒட்டுமொத்தமாக 210 சிக்ஸர்கள் இதுவரை அடித்துள்ளார்.

அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 5-வது இடத்தில் உள்ளார். தோனி 219 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சாஹித் அப்ரிடி (351) முதலிடத்திலும், கெயில் (275) 2-வது இடத்திலும், ஜெயசூர்யா( 270) 3-வது இடத்திலும் உள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x