Published : 13 Jan 2019 12:45 PM
Last Updated : 13 Jan 2019 12:45 PM

தோனியின் ‘ஆமை ஆட்டம்’ யாருக்கும் உதவாது: அகர்கர் காட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தோனியின்  மந்தமான பேட்டிங் ரோஹித்துக்கும், இந்திய அணிக்கும் உதவவில்லை என்று முன்னாள் வீரர் அஜித் அகர்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் 298 ரன்கள்வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் சர்மா, தோனி கூட்டணி அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். இதில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், அதன்பின் அதிரடியாக ஆடி சதம் அடித்து 133 ரன்கள் சேர்த்தது அனைவராலும் பாராட்டப்பட்டது

ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் களத்தில் நின்று ஆடிய தோனி, 96 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 13 மாதங்களுக்குப்பின் அரைசதம் அடித்தார். இவரின் ஆமை வேக பேட்டிங் தோனியின் ரசிகர்களையே வெறுப்படைய வைக்கும் விதமாக இருந்தது.

ரோஹித் சர்மா அடித்து ஆடி வரும்நிலையில், ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் வகையில் தோனியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருந்தது. ஏறக்குறைய 50 ஸ்டிரைக் ரேட் மட்டுமே தோனியால் பராமரிக்க முடிந்தது. தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்ம், பேட்டிங்கில் தொடர்ந்து பயிற்சியின்றி இருக்கிறாரா என்பதை ரசிகர்களால் ஊகிக்க முடிந்தது.

அதற்கு ஏற்றார்போல் முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் தோனியின் பேட்டிங் குறித்து மிகவும் காட்டமாக கிரிக்இன்போ தளத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம் என்பது மிகவும் கடினமான சூழல்தான். அதை மறுக்கவில்லை, ஆனால், களத்தில் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகபட்சமாக 30 பந்துகள் வரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிலைத்துவிட்டால், அடித்து ஆடி,அணியை வழிநடத்துவது சீனியர் வீரருக்கு அழகு. அதைத்தான் ரோஹித் சர்மா அருமையாகச் செய்தார். ஆனால், மறுமுனையில் இருந்த தோனி, ரோஹித் சர்மாவுக்கு பாரமாகவே இருந்தார். அவரின் ஆமை ஆட்டம் யாருக்கும் உதவாது. ஒருநாள் போட்டியில் 100 பந்துகளைச் சந்தித்து 50 ரன்கள் சேர்த்தல் என்பது எங்கும் பார்த்ததுஇல்லை.

சில பந்துகள் களத்தில் நிலைத்து நிற்க வீணாக்கலாம் என்கிற கூற்றை ஏற்றுக்கொண்டாலும், ஒரு கட்டத்தில் ரன்அடிக்க முடியாவிட்டால், பந்தை வீணடிக்காமல் விக்கெட்டை இழந்துவிட்டு ஏன் செல்லக்கூடாது. அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் ஒரு பேட்ஸ்மேன் செய்ய வேண்டும். தோனி 100 பந்துகளில் அரைசதம் அடித்தது அணிக்கும் உதவாது, ரோஹித்துக்கும் உதவாது. தோனி நிலைத்து ஆடினார் என்று அவரின் ரசிகர்கள் வாதிட்டாலும், அனைத்துச் சுமைகளையும் சுமந்தது என்னவோ ரோஹித் சர்மாதான். இவ்வாறு அகர்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x