Last Updated : 13 Jan, 2019 09:14 AM

 

Published : 13 Jan 2019 09:14 AM
Last Updated : 13 Jan 2019 09:14 AM

பாண்டியா, ராகுலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு

இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு மாற்றாகத் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், சுப்மான் கில் ஆகியோரை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ஆஸ்திரேலியத் தொடரில் இணைந்து விளையாடுவார், சுப்மான் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் இணைந்து விளையாடுவார்.

இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, பாண்டியா, ராகுல் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட பிசிசிஐ, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், உடனடியாக இருவரும் நாடு திரும்பவும் உத்தரவிடப்பட்டது.

 

இந்நிலையில், இருவருக்கு மாற்றாக வீரர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும், சுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் விஜய் சங்கர், வரும் 15-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலேயே இந்திய அணியில் இணைந்து கொள்வார்.

ஆனால், சுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் இந்திய அணிக்கு முதன் முதலாக 19-வயதான சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் அணியில் இடம் பெற்ற சுப்மான் கில் 10 இன்னிங்ஸில் 790 ரன்கள் குவித்தார். இதில் 2 இரட்டை சதமும், 5 அரைசதமும் அடங்கும். மேலும், நியூசிலாந்துக்குச் சென்ற இந்திய ஏ அணியிலும் சுப்மான் கில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டில் நியூசிலாந்தில் நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கில்லை ரூ.1.80 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கொல்கத்தா அணியில் இடம் பெற்ற கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் விஜய் சங்கர் 2-வது முறையாக இந்திய அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடந்த நிடாஹஸ் கோப்பையில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியஏ அணியில் இடம் பெற்றிருந்த விஜய் சங்கர் 3 போட்டிகளில் 188 ரன்கள் குவித்தார். மேலும், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் தேவை என்பாதல், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x