Published : 10 Jan 2019 03:39 PM
Last Updated : 10 Jan 2019 03:39 PM

விராட் கோலி முதல் ரிஷப் பந்த் வரை புஜாராவைச் சுற்றித்தான் ரன்கள் சேர்த்தனர், புஜாரா தனித்துவம்: சச்சின் புகழாரம்

பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது இந்த முறை தொடரை வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு என்றார்,  அவர் கூறியது பலித்தது, அதன் காரணமாக அவர் இந்திய வரலாற்று தொடர்  வெற்றி பற்றி கூறும்போது,  புஜாராவும் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை தனித்துவமானது, அதுவே வெற்றிக்குக் காரணம் என்றார்.

 

இந்தத் தொடரின் சிறந்த ஆட்டத்திறன் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, “ஒரு தனிப்பட்ட ஆட்டத்திறன் என்பதைக் கூறுவது கடினம். புஜாரா ஆட்டம் மிகவும் தனித்துவமானது, சிறப்பு வாய்ந்தது, பவுலர்கள் அபாரம், ஆனால் புஜாராவின் அடித்தளம்தான் முக்கியக் காரணம். அவரைச் சுற்றிதான் மற்றவர்கள் ரன்கள் எடுத்தனர். விராட் கோலி முதல் ரிஷப் பந்த் வரை. ஒரேயொரு ஆட்டத்தினை நான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அது புஜாராவின் பேட்டிங்தான், இவருடன் வேகப்பந்து வீச்சாளர்கள்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த வெற்றி மிக அவசியமானது, முக்கியமானது. எனக்கு 10 வயதாக இருந்த போது கிரிக்கெட் பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா உலகக்கோப்பையை வென்று விட்டது என்று எனக்கு தெரிந்தது, அங்குதான் என் பயணம் தொடங்கியது. அதே போல்தான் இந்த  டெஸ்ட் தொடர் வெற்றி இளைஞர்களுக்கு பெரிய அளவில் உத்வேகமூட்டும். இதைத்தான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி செய்துள்ளது.

 

வேகப்பந்து வீச்சாளர்களின் டயட், பயிற்சி, உடற்தகுதி பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமானது, அதனால் தான் இந்த இந்திய வீச்சாளர்கள் அருமையாக வீச முடிந்தது, உள்கட்டமைப்பையும் மறந்து விட வேண்டாம். உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சியடையும் என்று நம்புவோம்.

 

பும்ரா, ஷமி, இஷாந்த், அஸ்வின், ஜடேஜா, குல்தீப், உமேஷ் பல்வேறு தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மணிக்கு 140 கிமீ வேகத்துக்கு மேல் சீராக வீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

 

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பேட்டிங்குக்கு சவாலான, கடினமான பிட்ச்களை தயாரிக்க வேண்டும். இதனால் தானாகவே தரமான பேட்ஸ்மென்கள் உருவாவார்கள். அதற்காக பவுலர்கள் வெறுமனே வந்து வீசினால் போதுமானது என்று அர்த்தமல்ல, அவர்களும் ஸ்விங், ஸ்பின்னைக் கட்டுப்படுத்த வேண்டுமல்லவா? இதுதான் திறமை” என்றார் சச்சின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x