Published : 01 Jan 2019 01:48 PM
Last Updated : 01 Jan 2019 01:48 PM

சிட்னி டெஸ்ட்டை வெல்ல தீவிரம்: பயிற்சியில் பங்கேற்ற 7 ஆஸி. வீரர்கள்: ஆரோன் பிஞ்ச் நீக்கம்?

சிட்னியில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சிட்னியில் உள்ள எஸ்சிஜி மைதானத்தில் இன்று காலையில் நடந்த பயிற்சிக்கு ஆஸ்திரேலிய அணியில் உள்ள 7 வீரர்கள் மட்டுமே வந்து பங்கேற்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது டெஸ்ட் வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சிட்னி தொடரை இழக்காமல் குறைந்தபட்சம் டிரா செய்ய இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யத் தீவிரமாக இருந்து வருகிறது.

இதற்காக 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி லெக்ஸ்பின்னர் லாபுசாங்கே சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் இருநாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

4-வது டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 14 வீரர்களில் 7 வீரர்கள் மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர். டிம் பெய்ன், உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச்,மார்கஸ் ஹாரிஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், மார்னஸ் லாபுசாங்கே ஆகியோர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்றனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் சொதப்பிய ஆரோன் பிஞ்ச், 4-வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது குறித்த உறுதியான தகவல் ஏதும் இல்லை.

ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில், “ 4-வது டெஸ்ட் போட்டியிலும் அணியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரருக்குப் பதிலாக நடுவரிசையில் களமிறங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x