Published : 01 Jan 2019 01:02 PM
Last Updated : 01 Jan 2019 01:02 PM

எம்.பி. ஆகிறார் வங்கதேச வீரர் மோர்தசா: தேர்தலில் அபார வெற்றி

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ரபி மோர்தசா சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாலும், உலகக்கோப்பைத் தொடரில் அணியில் இடம் பெற்று விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 299 தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் 288 இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. அவாமி லீக் கட்சியின் சார்பில் நராலி-2 தொகுதியில் மோர்தசா போட்டியிட்டார். இதில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், விரைவில் எம்.பி.யாகப் பதவி ஏற்க உள்ளார்.

தேர்தலுக்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை மோர்தசா வழிநடத்தி தொடரை வென்று கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்றாலும் உலகக்கோப்பை போட்டிவரை அணிக்காக விளையாடுவேன்” எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில், “ எனக்கு எப்போதும் அரசியல் மீது அதிக ஆர்வம் உண்டு. நாட்டில் வளர்ச்சி என்பது அரசியலில் ஈடுபடாமல் எந்த ஒரு விஷயத்தையும் செய்யமுடியாது என்பதை நம்புகிறேன். ஆனால், எனது நாட்டுக்குச் சேவையாற்ற இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன் “ எனத் தெரிவித்தார்.

வலது கை வேகப்பந்துவீச்சாளரான மோர்தசா கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை மோர்தசா குறைத்துக்கொண்டார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் மோர்தசா இதுவரை 202 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1728 ரன்கள் சேர்த்துள்ளார். 258 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டி20 போட்டிகளில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக மோர்தசா அறிவித்தார். இதுவரை 54 டி20 போட்டிகளில்விளையாடி 42 விக்கெட்டுகளை மோர்தசா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x