Published : 01 Jan 2019 10:21 AM
Last Updated : 01 Jan 2019 10:21 AM

டி20 போட்டியில் மைல்கல்: ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரஷித் கான் சாதனை

டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார்.

மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 118 விக்கெட்டுகளையும், 35 டி20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 142 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 214 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

2018-ம் ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான 94 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த ரஷித் கான் தற்போது பிக்பாஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ரஷித் கானின் தந்தை காலமாகிவிட்டதால், 2 போட்டிகளில் அவர் பங்கேற்காமல் சென்று நேற்று மீண்டும் விளையாடினார். இதில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை ரஷித் கான் கைப்பற்றினார்.

இதன் மூலம் 2018-ம் ஆண்டில் டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷித் கான் சாதனை படைத்துள்ளார். இதுவரை டி20 போட்டிகளில் எந்த ஒருவரும் இந்த சாதனையைச் செய்தது இல்லை. ரஷித் கான் தந்தை காலமாகாமல் இருந்திருந்தால், அவர் நிச்சயம் 100 விக்கெட்டுகளைக் கடந்திருப்பார்.

2018-ம் ஆண்டில் 61 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் சராசரியாக 15 ரன்களும், எக்கானமியாக 7 ரன்களும் ரஷித் கான் வைத்துள்ளார்.

ரஷித் கானுக்கு அடுத்த இடத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் டிவைன் பிராவோ 2016-ம் ஆண்டில் 72 போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் ரஷித் கான் 56 போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், கடந்த ஆண்டு அதை முறியடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக 22 விக்கெட்டுகளையும், பிக்பாஷ் லீக் போட்டியில் 19 விக்கெட்டுகளையும், ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக 21 விக்கெட்டுகளையும், சசெக்ஸ் அணிக்காக 17 விக்கெட்டுகளையும், ஆப்கானிஸ்தான் லீக் போட்டியில் 10 விக்கெட்டுகளையும், ஜான்ஸி சூப்பர் லீக் போட்டியில் 7 விக்கெட்டுகளையும் ரஷித் கான் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x