Last Updated : 30 Dec, 2018 08:40 AM

 

Published : 30 Dec 2018 08:40 AM
Last Updated : 30 Dec 2018 08:40 AM

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா: மெல்போர்னில் 150-வது டெஸ்ட் வெற்றி: பும்ரா சாதனை

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துள்ளது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி முதல்முறையாகப் பெற்றுள்ளது. 

கடந்த 1980-81-ம் ஆண்டில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி இதே மெல்போர்ன் மைதானத்தில் கிரேக் சாப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வென்றது. ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின் 2 வெற்றிகளை ஆஸி. மண்ணில் இந்தியா பெற்றுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியாவில் நடந்த போது அதை இந்திய அணி கைப்பற்றி இருந்ததால், இந்த தொடர் சமன் அடைந்தாலும், அந்த கோப்பை இந்திய அணி வசமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை குறுக்கிட்டு ஏறக்குறைய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்காததால், போட்டி சமனில் முடிந்து இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிடுமோ என்று கவலை நீங்கியது.

உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதால், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இசாந்த், பும்ரா வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி மட்டுமன்று, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சு மிகப் பிரமாதமாக இருந்தது.

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றி மறக்க முடியாததாகும். ஏனென்றால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்போட்டி விளையாடத் தொடங்கிய பின் பெறும் 150-வது வெற்றி இதுவாகும். அதிலும், இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கிடைத்திருப்பது மிகச் சிறப்பாகும்.

அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க சில சாதனைகளையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். அறிமுக ஆண்டிலேயே அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர், இந்திய அளவில் முதல் வீர்ர் எனும் பெருமையை பும்ரா பெற்றார்.

வெளிநாடுகளில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கங்குலியின் 11 வெற்றி சாதனையை கோலி சமன் செய்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிகமான கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை ரிஷப்பந்த் 20 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமலும், இமாலய இலக்கு என்பதாலும் கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று விக்கெட்டுகளை மள மளவென பறிகொடுத்தது. ஆனால், கம்மின்ஸ், லயான் நிலைத்து ஆடி இந்திய அணியின் பொறுமையை சோதித்தனர்.

4-ம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னிலும், லயன் 6 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

கடைசி நாளான இன்று மெல்போர்னில் காலை முதல் இடைவெளி விட்டு மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஆனது. ரசிகர்கள் ஒருபுறம் வந்து ஆட்டத்தின் முடிவை அறிய குழுமி இருந்தனர்.

ஏறக்குறை உணவு இடைவேளைக்குப் பின் மழை நின்று மைதானத்தின் ஈரம் குறையத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடர நடுவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கம்மின்ஸ், லயன் களமிறங்கினார்கள். பும்ரா, இசாந்த் சர்மா வீசிய 3 ஓவர்களிலும் விக்கெட் ஏதும் விழவில்லை. பும்ரா வீசிய 4-வது ஓவரில் கம்மின்ஸின் பேட்டின் முனையில் பட்டு புஜாராவின் கைகளில் பந்து தஞ்சமடைந்தது. கம்மின்ஸ் 63 ரன்களில் நடையைக்கட்டினார்.

அடுத்து ஓவரை இசாந்த் சர்மா வீசினார். 3-வது பந்தை எதிர்கொண்ட லயன் 7 ரன்கள் சேர்த்த நிலையில், ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியே இந்தியாவின் 150-வது டெஸ்ட் வெற்றி உறுதியானது.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் பும்ரா இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதையும் பும்ரா பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x