Published : 16 Dec 2018 05:48 PM
Last Updated : 16 Dec 2018 05:48 PM

கோலி சர்ச்சை அவுட்டுக்குப் பிறகு இந்தியா ஆவேசப் பந்துவீச்சு: ஹாரிஸ் தலை, ஏரோன் பிஞ்ச் விரல் பதம்பார்ப்பு: ஆஸி. 175 ரன்கள் முன்னிலை

பெர்த் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. விராட் கோலியின் ஆகச்சிறந்த சதம், அவரது அவுட் சர்ச்சை, நேதன் லயனின் அற்புதப் பந்து வீச்சினால் எடுத்த 5 விக்கெட்டுகள்,  283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு இந்தியாவின் ஆவேசப்பந்து வீச்சு என்று விறுவிறுப்பாக அமைந்தது.

 

ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா கடும் அதிர்ஷ்டத்துடன் 41 ரன்களுடனும், டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

 

ஏரோன் பிஞ்ச் ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தை தடுத்தாடிய போது வலது கை ஆள்காட்டி விரலில் காயமேற்பட அவர் ரிட்டையர்ட் ஆனார், ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு சீரியஸான காயம் இல்லை என்று தெரியவந்ததையடுத்து நாளை களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஹாரிஸ் (20) ரன்கள் எடுத்த இன்னிங்ஸில் பவுன்சரில் தலையில் வந்து மோதியது பந்து, அதனால் அவர் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை பும்ராவின் மிகப்பிரமாதமான பந்து ஒன்று ரவுண்ட் த விக்கெட்டில் ஆஃப் ஸ்டம்பில் உள்ளே செலுத்தப்பட்டு பிட்ச் ஆகி சற்றே நேர் ஆக எதிர்பார்த்த பவுன்ஸ் இல்லை, மார்கஸ் ஹாரிஸ் பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்பின் பைல்களைத் தொந்தரவு செய்தது, பவுல்டு அவுட் ஆனார்.

 

இந்திய அணி பிரமாதமாக பந்து வீசியும் அதற்கான தகுந்த பலன்கள் கிட்டவில்லை, கேட்ச்கள் விடப்பட்டது, ரிஷப் பந்த், புஜாராவுக்கு இடையே ஒரு பந்து சென்றது, கவாஜாவுக்கு ரஹானே ஸ்லிப்பில் ஹனுமா விஹாரி பந்தில் சற்றே கடின வாய்ப்பைக் கோட்டை விட்டார். மேலும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை கவாஜா புல் ஆடிய போது கொடியேற்றினார், பந்து உயரே எழும்பியது, ஆனால் அவர் அதிர்ஷ்டம் அங்கு பீல்டர்கள் இல்லை. ரிஷப் பந்த் பெருமுயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை.

 

இந்திய வேகப்பந்து வீச்சில் பொறிபறந்தது. கவாஜாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனைகள் கொடுக்கப்பட்டது, டிம் பெய்ன் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை தடுக்கும் முயற்சியில் எஸ் போல் வளைந்தார்.

 

முன்னதாக இன்று காலை அஜிங்கிய ரஹானேவும் கோலியும் ஆஸி.யை அழ அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை நேதன் லயன் முறியடித்தார், லயன் வீசிய பந்து திரும்பும் என்று முன்னால் காலைத்தூக்கிப் போட்டு தடுத்தாடினார் ரஹானே ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த அளவுக்குத் திரும்பவில்லை,  எட்ஜ் ஆகி டிம் பெய்னிடம் கேட்ச் ஆனது.

 

ஹனுமா விஹாரி 20 ரன்களுக்கு தன்னம்பிக்கையுடன் விளையாடினார். கோலியும் இவரும் 50 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த விஹாரி, ஹேசில்வுட்டின் அவருக்கேயுரிய அவுட்ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.  விராட் கோலி அபாரமான சதத்துக்குப் பிறகு 123 ரன்களில் சர்ச்சைக்குரிய ஹேண்ட்ஸ்கம்ப் கேட்சில் கமின்சிடம் வெளியேறினார்.

 

ரிஷப் பந்த்  நேதன் லயனை மேலேறி வந்து சிக்ஸ் அடித்தார், மேலும் ஒரு பவுண்டரியுடன் அவர் 36 ரன்களை எடுத்த நிலையில் மீண்டும் ஒருமுறை லயன் பந்தை  தூக்கி அடித்துக் குறிபார்த்து டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். பந்த், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரை லயன் வீழ்த்தி 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மிகவும் ஆக்ரோஷமான பந்து வீச்சு லயனுடையது, இந்திய அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

ஆஸ்திரேலிய அணி இன்னிங்சைத் தொடங்கிய போது பிஞ்ச் ஆக்ரோஷமாக ஆடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த போது ஷமி ஷார்ட் பிட்ச் பந்தில் வலது ஆள்காட்டி விரலில் அடிவாங்கி பெவிலியன் திரும்பினார், நாளை களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மார்கஸ் ஹாரிஸ் பும்ராவின் துல்லியத்தாக்குதலில் பவுல்டு, முன்னதாக பும்ரா பவுன்சரில் தலையில் அடி வாங்கினார்.  ஷான் மார்ஷ் 5 ரன்களில் ஷமியின் குறுக்காகச் சென்ற எழும்பிய பந்தை புல் ஆட முயன்று மட்டையின் அடியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.  பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டிய போது இஷாந்த் சர்மாவின் ஃபுல் லெந்த் உள்ளே வந்த பந்தில் நேராக வாங்கி எல்.பி.ஆனார்.

 

ட்ராவிஸ் ஹெட் அவுங்க ஊர் ரிஷப் பந்த் போலும், ரிஷப் பந்த் எப்படி நேதன் லயனிடம் திருத்திக் கொள்ளாது ஆடினாரோ, அதே போல் ட்ராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸ் போலவே திருத்திக் கொள்ளாமல் தேர்ட்மெனில் அப்பர் கட்டில் கேட்ச் ஆகி ஷமியிடம் ஆட்டமிழந்தார், அவர் ஸ்கோர் 19.  உமேஷ் யாதவ் மோசமான தேர்வு என்பதை மீண்டும் நிரூபித்தார், அவர் 8 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்தார் விக்கெட் இல்லை. ஹனுமா விஹாரி டைட்டாக வீசி 8 ஓவர் 4 மெய்டன் 11 ரன் விக்கெட் இல்லை. படு டைட் பந்து வீச்சு. ஷமி 2 விக்கெட்டுகள், இஷாந்த், பும்ரா தலா 1 விக்கெட்.

 

ஆட்ட முடிவில் கவாஜா போராடி எடுத்த 41 ரன்களுடனும், டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், ஆஸி. 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, 250க்குள் முன்னிலையை இந்தியா சுருக்க வேண்டும், அப்போதுதான் வெற்றிக்கான ஒரு வாய்ப்பு கிட்டும். ஆஸ்திரேலியா 132/4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x