Published : 15 Dec 2018 04:28 PM
Last Updated : 15 Dec 2018 04:28 PM

நல்ல வேளை.. அந்த சாதனை இன்னிங்ஸுக்கு முன்னால் ஓய்வு அறிவித்திருப்பேன்: ஆடம் கில்கிறிஸ்ட் நெகிழ்ச்சிப் பகிர்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் எடுத்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனைக்கு அருகில் சென்ற இன்னிங்ஸை ஆடுவதற்கு சில நாட்கள் முன்னால் ஓய்வு அறிவிப்பதாக இருந்ததாக ஆஸ்திரேலிய அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஆடம் கில்கிறிஸ்ட் இப்போது தெரிவித்துள்ளார்.

 

ஃபாக்ஸ் கிரிக்கெட்டின் கிரிக்கெட் 360 நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட் அப்போதைய தன் மனநிலையைப் பகிர்ந்து கொண்டதோடு 57 பந்துகளில் சதம் எடுத்த அதிரடி இன்னிங்சையும் விளக்கினார்.

 

2006-07 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் 57 பந்துகளில் அதிரடி சதம் கண்டார். இதில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும்.  இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார் கில்கிறிஸ்ட், இன்னொரு மோசமான ஸ்கோர் எடுத்தா ரிட்டையர் ஆகி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். மேலும் அதற்கு முந்தைய இன்னிங்ஸ்களிலும் திருப்திகரமாக ஆடாததால் ஓய்வு பெறலாம் என்ற எண்ணம் அவருக்குத் தலைதூக்கியதாக அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

 

“முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனேன். அப்போது முடிந்து விட்டோம் என்று நினைத்தேன். என்னுடைய காரிலிருந்து மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் முடிவை தெரிவித்தேன்.  ஆனால் இரவு வீட்டுக்குச் சென்ற போது என் மனைவி உண்மையாக அல்ல, கற்பனையாக என் தலையில் குட்டியது போல் சில வார்த்தைகளைப் பேசினார். டக் அவுட்டினால் இப்படி முடிவு கட்டிவிட்டாய் என்றார்.

 

இது எனக்கு கொஞ்சம் மனத்தெளிவை அளித்தது. ஆனாலும் 2வது இன்னிங்சில் பேட் செய்யும் போது சரியாக ஆடவில்லை எனில் ஓய்வு பெற வேண்டியதுதான் என்றுதான் இறங்கினேன். முதல் பந்தே பிளிண்டாஃப் வீசியது மிகப்பெரிய எட்ஜ் எடுத்து கல்லி வழியாக பவுண்டரிக்குச் சென்றது நல்ல வேளையாக அது பீல்டர் கைக்குச் செல்லவில்லை. அவுட் ஆகியிருந்தால் 2 இன்னிங்ஸ்களிலும் டக் என்ற ‘பேர்’ ஆகியிருக்கும். நான் ரிட்டையர்தான், ஆனால் அது நான்குக்குச் சென்றது.

 

அடுத்த பந்தும் அதே போன்ற ஒரு பந்துதான் ஆனால் நாம் எம்பி அதை என் நடுமட்டையில் விளாச பாயிண்டில் பவுண்டரிக்குச் சென்றது. ஆம்! இதுதான் சரியான அடி, இப்படித்தான் உணர வேண்டும் எனும்படியான ஷாட் அது.  நன்றாக ஆடுகிறோமா அல்லது இல்லையா என்பதற்கான இடைவெளி ஒருபந்துதான். இது என் இன்னிங்சை கட்டமைத்தது.

 

இன்னொரு விஷயம் மாண்டி பனேசர் பந்தில் மட்டையில் பட்டு பேடில் பட்டு அவுட் ஆகக்கூடாது என்று முடிவு கட்டினேன், முதல் இன்னிங்சில் அப்படித்தான் ஆட்டமிழந்தேன். ஆனால் இம்முறை இவரை விடக்கூடாது போட்டு பெரிய ஷாட்களாக ஆடி சாத்த வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.”

 

என்று 57 பந்துகளிலில் எடுத்த 2வது அதிவேக அதிரடி சதத்தை பற்றி கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x