Published : 13 Dec 2018 04:54 PM
Last Updated : 13 Dec 2018 04:54 PM

பெர்த் பிட்சுன்னா பயம்- இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு: புதிய மைதானம், புதிய எகிறு களம்; சமாளிக்குமா ஆஸி.

பெர்த் நகரின் புதிய ஆப்டஸ் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை, 14-12-18) அடிலெய்ட் உதையினால் உடைந்து நொறுங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி 1-0 முன்னிலை பெற்ற கிங் கோலி படையை எதிர்கொள்கிறது.

 

இது பழைய மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க (WACA)மைதானம் அல்ல.  இது புதிய மைதானம், புதிய ட்ராப்-இன் பிட்ச், அதாவது வெளியில் தயாரித்து மைதானத்தில் பதிக்கப்பட்ட பிட்ச். ஏற்கெனவே பிட்சில் புற்கள் கூடுதலாக உள்ளன, நல்ல கடினமான பிட்ச், பிறகு அடிக்கும் வெயிலில் ஆங்காங்கே பிளவுகள் ஏற்படும் அப்போது பவுன்ஸ் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருக்கும். மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது, இந்திய அணிக்கு மட்டுமல்ல, இந்திய பவுலர்களினால் பலவீனமான ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கும்தான்.

 

விராட் கோலி, “இப்போதெல்லாம் கிரீன் டாப் பிட்சைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறதே தவிர பதற்றம் ஏற்படுவதில்லை” என்றார். இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இம்முறை ஒரு மாற்றத்துக்காக பெர்த் பிட்ச் பயத்தை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தியுள்ளனர்.  இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று விட்டால் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா இழக்க வாய்ப்பில்லை என்பதோடு, ஒரு அரிதான அயல் நாட்டு 4-0 ஒயிட் வாஷுக்கும் சாத்தியமுள்ளது, ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை எந்த அணியாவது டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் கொடுத்துள்ளதாகத் தெரியவில்லை.

 

‘காயம்’ காரணமாக அஸ்வின், ரோஹித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. அஸ்வின் காயம் புரிகிறது, ரோஹித் சர்மா காயம் என்பது நல்ல பவுன்ஸ் பிட்சில் அவரை எக்ஸ்போஸ் செய்ய வேண்டாம் என்பதாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது, ‘உஷ் கண்டுக்காதீங்க’வாகக் கூட இருக்கலாம். ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட் வருகிறது மிக முக்கியமான அணியான மும்பை இந்தியன்ஸ் கேப்டன் வேறு, எங்காவது எகிறு பிட்சில் எகிறு பந்தில் அடிபட்டுக் கொண்டாரென்றால்...

 

பேய்வேகப் பிட்சில் அனுபவமற்ற ஹனுமா விஹாரியை எக்ஸ்போஸ் செய்வது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. முரளி விஜய் தனது பாரம்பரிய ஆட்ட அணுகுமுறையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு முற்றிலும் வேறு ஒரு அணுகுமுறையைக் கையாண்டால்தான் ரன்கள் எடுக்க முடியும், ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் வெளியே செல்லும் பந்தை அவர் கட், அப்பர் கட், பஞ்ச் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவர் பந்துகளை ஆடமால் விட்டுக்கொண்டே இருந்தால் எதிர்முனை பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆனால் அவருக்கும் உத்வேகம் வேண்டுமே. எப்படியிருந்தாலும் பிரிதிவி ஷா மெல்போர்ன் டெஸ்ட்டுக்கு வந்து விடுவார் எனும் போது அவருக்காக இவர் இடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள போது அவருக்கு உத்வேகம் எப்படி இருக்கும்?, ஆனால் இந்த அருமையான கிரீன் டாப் பிட்சில் எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நின்று ஆடுவது அவருக்கு ஒரு பேரனுபவத்தைக் கொடுக்கும். அவர் இந்திய அணி, தன் இடம், என்பதையெல்லாம் மறந்து விட்டு பிராண்ட் நியூ பிட்சில், எகிறு ஆட்டக்களத்தில் சிறந்த பந்து விச்சை எதிர்கொண்டு ஒரு அரைசதம அடித்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சிறந்த அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

 

இனி நூறாண்டுக்கு ஒருமுறைதான் இப்படிப்பட்ட பிட்ச் கிடைக்கும். பிட்ச் தயாரிப்பாளர் கூறும்போது, “எவ்வளவு உச்ச பட்ச சாத்தியமோ அவ்வளவு பவுன்ஸ்’ ஆகுமாறு பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

ஹனுமா விஹாரி இதுவரை ஆடியதைப் பார்க்கும் போது பவுன்சரை நன்றாக ஹூக் செய்கிறார், இங்கு அவருக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம். செடேஷ்வர் புஜாரா அடிலெய்டில் கிட்டத்தட்ட இந்திய ரக பிட்சில் மிக முக்கியமான சதத்தை எடுத்தார், பிறகு 71 ரன்களை 2வது இன்னிங்சில் எடுத்தார், இது வெற்றியில் மிக மிக முக்கியப் பங்களிப்பாக உள்ளது. புஜாராவின் உத்தி இத்தகைய பவுன்ஸ் பிட்சுக்கு பொருந்துமா என்பது ஐயமே, ஆனால் அவர் தற்போது இருக்கும் ஃபார்ம், தன்னம்பிக்கை ஆகியவை அவரை உயரச்செய்யும் என்று எதிர்பார்க்கலாம். விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. பெர்த்தில் அவருக்கு வேகப்பந்து சோதனை, ஷார்ட் பிட்ச் சோதனை காத்திருக்கிறது, அவரது வழக்கமான ராஜகவர் ட்ரைவ் பிட்ச் அல்ல இது, கிடைக்கோட்டு மட்டை ஷாட்களை அதிகம் ஆட வேண்டிய பிட்ச், கோலி புல்ஷாட்களை ஆடுகிறார், ஆனால் ஆஃப் திசையில் அதிகம் அவர் கட் ஷாட்களை ஆடுவதில்லை, இந்தப் பிட்சில் தேர்ட்மேன், டீப் பேக்வர்ட் பாயிண்ட்டில் ரன் எடுக்க முடிந்தால்தான் அவர் வேகமாக ரன்களை எடுக்க முடியும்.

 

அதே போல் விராட் கோலி தன் களவியூகத்தில் பாரம்பரிய முறைகளைத் துறந்து நெருக்கமாக பீல்டிங்கை அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இயன் சாப்பல் கூறுவது போல் புதிய பேட்ஸ்மென்களுக்கே அவர் தள்ளித் தள்ளி நிறுத்தி எளிதான சிங்கிள்களைக் கொடுத்து விடுகிறார், ஆஸ்திரேலியாவில் இப்போதைக்கு பயங்கரமான பேட்ஸ்மென்கள் இல்லாமல் கட்டினபசுவாக ஆடும் பேட்டிங் இருப்பதால் கோலி தன் களவியூகத்தில் பிழைக்கிறார், நல்ல பேட்டிங் லைன் அப் இருந்தால் கோலியின் பாரம்பரிய முறைகள் சாத்துமுறையில்தான் போய் முடியும். பிட்சில் எந்தப் பந்துக்கு எப்படி கேமராவில் போஸ் கொடுக்கலாம் என்பதை விடுத்து களவியூகத்தில் கவனம் செலுத்த வேண்டும் அவர். இங்கு ஸ்லிப் பீல்டிங் முக்கியமானது, வேக, எகிறு ஆட்டக்களம் என்பதால் விக்கெட் கீப்பர், ஸ்லிப்கள் எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும், இதிலெல்லாம் விராட் கோலி எவ்வளவு தேறுவார் என்பது இந்த டெஸ்ட்டில் தெரிந்து விடும்.

 

பிட்ச் புற்கள் பிட்ச், அதிவேகம், எகிறு ஆட்டக்களம் என்பதால் டாஸ் வென்று முதலில் விராட் கோலி தெரியாத்தனமாக பீல்டிங்கைத் தேர்வு செய்து விடக்கூடாது. அடிலெய்ட் போலவே பேட்டிங்கைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் பிட்ச் போகப்போக வேகம் கூடும். ஆனால் நாம் இப்படிக் கூறுவோம் அவர் டாஸ் வென்று பீல்டிங் என்று வெறுப்பேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

இதே பிட்சில் சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட்:

 

இதே மைதானத்தில் அதிவேக பிட்சில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியும், நியூசவுத்வேல்ஸ் அணியும் விளையாடின, 4 நாள் போட்டியான இதில் 40 விக்கெட்டுகள் விழுந்தன. இதில் 8 விக்கெட்டுகள் ஸ்பின்னருக்குச் சென்றது, நேதன் லயன் 2 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேதன் லயன் எந்தப் பிட்சிலும் பந்துகளை திருப்பக் கூடிய பவுலராகிவிட்டார், இந்தப் பிட்சின் பவுன்சும் இந்திய வீரர்களுக்கு நேதன் லயனிடம் கஷ்ட காலங்களை எதிர்கொள்ளச் செய்யும். ஸ்பின் இல்லாமல் எப்போதும் ஆடக்கூடாது என்ற முடிவெடுத்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்கலாம், அவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார், பின்னால் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பதும் நல்லதுதான்.

 

ஏரோன் பிஞ்ச்சுக்குப் பதில் தொடக்கத்தில் மாற்றம்:

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஏரோன் பிஞ்ச் பேட்டிங் செய்த விதம் பண்டிதர்களின் கோபத்தை ஈர்த்தது, அதனால் இந்த டெஸ்ட்டில் மார்கஸ் ஹாரிஸுடன் உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ் இறங்க ஆஸி.நிர்வாகம் முடிவெடுக்கலாம். ஏரோன் பிஞ்ச் தனது ஷெபீல்ட் ஷீல்ட் மிடில் ஆர்டர் டவுனுக்கு மீண்டும் செல்ல வாய்ப்புள்ளது.

 

ஆட்டம் நாளை காலை 7.50க்குத் தொடங்குகிறது.

 

இந்திய அணி விவரம் (13 வீரர்கள்):

 

விராட் கோலி, ராகுல், விஜய், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

 

ஆஸ்திரேலியா அணி: டிம் பெய்ன், மார்கஸ் ஹாரிஸ், ஏரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், நேதன் லயன்,  ஸ்டார்க், பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x