Last Updated : 13 Dec, 2018 03:39 PM

 

Published : 13 Dec 2018 03:39 PM
Last Updated : 13 Dec 2018 03:39 PM

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியவர் வி.வி.எஸ்.லஷ்மண்: கங்குலி புகழாரம்

2001-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் விளாசி இந்திய அணியை மட்டும் வி.வி.எஸ்.லஷ்மண் காப்பாற்றவில்லை, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையையும் சேர்த்து காப்பாற்றியுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவுக்குக் கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் வாஹ் தலைமையில் பயணம் மேற்கொண்டது. அப்போது, மும்பையில் நடந்த முதல் டெஸ்டியில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்று ஆஸ்திரேலிய அணி முன்னணியில் இருந்தது.

கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் வாஹ் சதம் அடிக்க ஆஸி. அணி 445 ரன்கள் குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பாலோ-ஆன் பெற்றது. ஆனால், 2-வது இன்னிங்ஸில் லஷ்மண் இரட்டை சதம் விளாசி 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்களும் விளாச இந்திய அணி 657 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

384 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. 2-வது இன்னிங்ஸில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதும், சச்சின் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து வெற்றிக்கு வழிகாட்டியது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை நினைவு கூர்ந்து வி.வி.எஸ். லஷ்மண் குறித்து கொல்கத்தாவில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கங்குலி பேசினார். “281 அன்ட் பியான்ட்” என்ற தலைப்பில், ஆர்.கவுசிக் எழுதியுள்ள அந்த நூலின் கொல்கத்தா பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சவுரவ் கங்குலி பேசியதாவது:

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் லஷ்மண் அடித்த 281 ரன்கள் குறித்து இந்த நூலுக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நூலுக்கு இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

என்னைப் பொறுத்தவரை “281 அன்ட் பியான்ட், அன்ட் சேவ்டு கங்குலி கேரீர்”(281 ரன்களுக்கு அப்பால், கங்குலியின் வாழ்க்கையைக் காப்பாற்றியது) என்று இருந்திருக்க வேண்டும். உண்மையில் அன்றைய போட்டியில் 281 ரன்கள் அடித்து இந்திய அணியை மட்டும் லஷ்மண் காப்பாற்றவில்லை, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையையே காப்பாற்றிவிட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டப் புகார் எழுந்து அடங்கி இருந்தநேரத்தில் நான் கேப்டனாக பதவிஏற்றேன். மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தோம். கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் மோசமான தோல்வியை நோக்கி சென்றம். அப்போது ராகுல் டிராவிட், லஷ்மண் கூட்டணி சேர்த்த ரன்கள்தான் அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றி பெற வைத்தது. லஷ்மண் மட்டும் அந்த போட்டியில் 281 ரன்கள் சேர்க்காமல் இருந்தால், நிச்சயம் தோல்வி அடைந்திருப்போம்.

 

அந்த டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் மாலை தேநீர் இடைவேளைக்குப் பின்புதான், டெஸ்ட் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி, எனக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுத்தது. எதையும் விட்டுக்விடக்கூடாது, கடைசிவரை முயன்று தீர்வு காணவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அந்த டெஸ்ட் போட்டி கற்றுக்கொடுத்தது.

மாற்றுவீரராக களமிறங்கிய ஹேமங் பதானி, ஷார்ட் லெக் திசையில், கேட்ச் பிடித்தது, சச்சின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது என அனைத்தும் மறக்க முடியாதது. அடுத்ததாகச் சென்னை டெஸ்ட் போட்டியிலும் கிடைத்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் லஷ்மணை அணியில் தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறாகும். லட்சுமண் அன்று இருந்திருந்தால், உலகக்கோப்பைப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றிருக்கமாட்டோம்.

என்னுடைய ஒவ்வொரு அணியிலும் லட்சுமண் இருக்கவேண்டும் என நினைத்தேன். கேப்டனாக எடுக்கும் முடிவுகள் சரியாகவும், தவறாகவும் இருக்கலாம். ரன் எடுக்காமல் கூட போகலாம். ஆனால், லட்சுமண் போன்ற வீரர் இல்லாத அணி உண்மையில் பலவீனமானதுதான்

இவ்வாறு கங்குலி பேசினார்.

வி.வி.எஸ். லஷ்மண் பேசுகையில், “ 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் நான் இடம் பெறாதது என் வாழ்க்கையில் மிகவும் மோசமான பகுதியாகும். அப்போதே நான் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட முடிவு செய்தேன். ஆனால், என் தந்தை என்னை இந்திய ஏ அணியில் விளையாட வற்புறுத்தினார். அதன்பின் நான் கிரிக்கெட் விளையாடவில்லை என்று முடிவு செய்தேன்.

ஆனால் இரு வாரங்களுக்குப் பின் நான் எடுத்த முடிவு சிறுபிள்ளைத்தனமானது என்று வேதனை அடைந்தேன். இருந்தாலும், 16 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடி, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியில் இருந்தது பெருமையாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது “ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x