Published : 13 Dec 2018 10:26 AM
Last Updated : 13 Dec 2018 10:26 AM

உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்

உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு மோதுகின் றன.

உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடர் தற்போது பரபரப்பான கால் இறுதி சுற்றை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் இந்திய அணி, வலுவான நெதர்லாந்துடன் மோதுகிறது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடைசியாக இந்திய அணி கடந்த 1975-ம் ஆண்டு முதன்முறையாக கோப்பையை வென்றிருந்தது. அந்தத் தொடருக் குப் பின் இந்திய அணி 43 ஆண்டுகளுக்குப் பிறகு இது வரை அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இந்த சோகத்துக்கு இம்முறை இந்திய அணி வீரர்கள் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணி, நெதர்லாந்தை வீழ்த்தியது கிடையாது. அந்த அணியுடன் 6 முறை மோதியுள்ள இந்திய அணி ஒரு ஆட்டத்தை மட்டுமே டிரா செய்திருந்தது. மற்ற 5 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை, மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தும் பட்சத்தில், 43 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதியில் கால்பதித்து ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கலாம். தரவரிசை மற்றும் சமீபகால பார்ம் ஆகியவற்றை பொறுத்தவரையில் இரு அணிகளுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

நெதர்லாந்து அணி தரவரிசை யில் 4-வது இடத்திலும், இந்திய அணி 5-வது இடத்திலும் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஒட்டுமொத்தமாக இதுவரை இரு அணிகளும் 105 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 33 ஆட்டங்களில் வெற்றியையும், 48 ஆட்டங்களில் தோல்வியையும், 24 டிராக்களையும் பதிவு செய்துள்ளது. 2013-ம் ஆண்டுக் குப் பிறகு இரு அணிகளும் 9 ஆட்டங்களில் மோதின. இதில் இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி 12 கோல்களை அடித்த நிலையில் 3 கோல்களை மட்டும் வாங்கியிருந்தது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 18 கோல்களை அடித்தது. 5 கோல்களை வாங்கியது. அந்த அணியின் கேப்டன் பில்லி பாக்கெர், வான் அஷ், ஜேரோன் ஹெர்ட்ஸ்பெர்ஜர், மிர்கோ புருஜ்சர், ராபர்ட் கேம்ப்பெர்மான், தியரி பிரிங்மான் ஆகியோர் அனுபவம் மிகுந்த வீரர்களாக உள்ளனர். இவர்கள் இந்திய அணியின் டிபன்ஸூக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.

முன்னதாக மாலை 4.45 மணிக்கு நடைபெறும் மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x