Published : 12 Dec 2018 04:21 PM
Last Updated : 12 Dec 2018 04:21 PM

இந்திய அணி கடந்த ஆஸி. அணிகளை விட ஆக்ரோஷமா? கோலி நல்ல கேப்டனா? - இயன் சாப்பல் கூறுவது என்ன?

முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளதால் இந்த இந்திய அணிதான் சிறந்தது என்ற எண்ணங்கள் பல்வேறு ஊடகங்களிலும் பிறரிடம் வைக்கும் கேள்வி வாயிலாகவும், அவர்களின் பதில் வாயிலாகவும் பரப்பப்பட்டு நிலை பெற்று வருகிறது.

 

ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் இத்தகைய போக்கிற்கு எதிரானவர். தான் நினைக்கும் கருத்துகளை அதற்கான ஆதாரங்களுடன் தைரியமாக கூறி வருபவர்.

 

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வாசகர்கள் இயன் சாப்பலிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

 

அதில் இந்த இந்திய அணி கடந்த ஆஸ்திரேலிய அணிகளை விடவும் ஆக்ரோஷமான அணியா என்ற ஒருகேள்விக்கு இயன் சாப்பல் கூறியதாவது, “இது ஆக்ரோஷமான இந்திய அணிதான், ஆனால் அதற்காக கடந்த கால ஆஸ்திரேலிய அணிகளை விட ஆக்ரோஷமா என்றால் இல்லை, நிச்சயமாக இல்லை” என்றார்.

 

உலகம் முழுதும் பவுலிங் தரநிலை உயர்ந்து வருகிறதா என்ற கேள்விக்கு, “இது பல விஷயங்களின் சேர்க்கைதான். பவுலிங் தரநிலை அதிகரித்து வருவதற்குக் காரணம் பேட்டிங் தரநிலை உலகம் முழுதும் குறைந்து வருகிறது, பயணம் செய்யும் அணிகள் அந்தந்த நாடுகளில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் நிறைய அங்கு கிரிக்கெட்டை ஆடுவதில்லை, இது பேட்டிங் திறமை குறைவதற்கு ஒரு முக்கியக் காரணம்”

 

விராட் கோலியை கேப்டன்சியில் எப்படி தரம் பிரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “விராட் கோலி நல்ல கேப்டன் தான், ஆனால் அவரும் இக்கால கேப்டன்கள் போல்  களவியூகத்தில் சரியாக இல்லை, நெருக்கமாக பீல்டர்களை நிறுத்தாமல் அடிக்கடி தள்ளித் தள்ளி நிறுத்துகிறார் இதனால் நிறைய சிங்கிள்களை எடுக்க அனுமதிக்கிறார், நல்ல பேட்ஸ்மென்களை தொடக்கத்தில் சிங்கிள்கள் எடுக்க அனுமதித்தால் அதற்கான அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது அவருக்குப் புரிவதில்லை. எனவே அந்த விதத்தில் கோலி கொஞ்சம் பின்னடைவு காண்கிறார்”

 

டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற தகுதியானவர்தானா? என்ற கேள்விக்கு, ‘இப்போதைக்கு ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த அவர்தான் சிறந்தவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நன்றாகவே பேட் செய்கிறார்.

 

இப்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரியானதே என்று கூறும் இயன் சாப்பல், தனக்கு 3-ம் நிலையில் எப்போதும் ஆக்ரோஷமான வீரரே பிடிக்கும் என்றும் அதற்கு ரோஹித் சர்மா இந்திய அணியில் இருக்கிறார், அவரை இறக்கிப் பார்க்கலாம் என்று கருதுகிறேன்’ இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x