Published : 10 Dec 2018 03:13 PM
Last Updated : 10 Dec 2018 03:13 PM

3 நாடுகளில் வென்ற முதல் கேப்டன்? கோலியின் புதிய சாதனை? ஆஸி.யின் தீராத சோகம்?- அடிலெய்ட் டெஸ்ட் குறித்த 15 முக்கிய சுவாரஸ்யத் தகவல்கள்

அடிலெய்டில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே ஆண்டில் 3 நாடுகளிலும் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஒரே கேப்டன், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவின் தீராத சோகம் என்ன என்பது குறித்த விவரம் வருமாறு:

1.  அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற 6-வது வெற்றியாகும். இதற்கு முன், பெர்த் மைதானத்தில் 2008-ம் ஆண்டிலும், அடிலெய்டில் 2003-ம் ஆண்டிலும் இந்தியா வென்றுள்ளது. அடிலெய்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின் 2 முறை வென்ற அணி இந்தியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

2.  ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் விளையாடச் சென்று முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி வெல்வது இதுதான்முதல் முறையாகும். இதற்கு முன் 11 முறை பயணித்துள்ள இந்திய அணி 9 முறை முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியும், 2 முறை டிரா செய்துள்ளது. அதேசமயம், இங்கிலாந்திலும் (1986,லார்ட்ஸ்), தென ஆப்பிரிக்காவிலும் (ஜோகன்ஸ்பர்க், 2006), நியூசிலாந்திலும் (3 முறை), மே.இ.தீவுகளிலும் (2 முறை) இந்திய அணி முதல் டெஸ்ட்டிலேயே வென்றது.

3.  அடிலெய்ட் மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததாகக் கடந்த 100 ஆண்டுகளில் சரித்திரம் இல்லை. இதுவரை அடிலெய்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 7 போட்டியில் ஆஸி. அணி தோல்வி அடைந்துள்ளது. 8 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

4.  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக எந்த அணியும் சேஸ் செய்தது இல்லை. கடந்த 2006-07-ம் ஆண்டு கேப்டவுனில் தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்தது மட்டும் விதிவிலக்கு. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளை டிராவும் செய்துள்ளது.

5.  கடந்த 3 சீசன்களில் ஆஸ்திரேலிய அணி தங்களின் பருவகாலத் தொடக்கத்தில் இரு முறை தோல்வியைச் சந்தித்தது. இப்போது இந்தியாவிடம் அடிலெய்ட் மைதானத்திலும், கடந்த 2016-17-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலிய அணி தோற்றுள்ளது. கடைசியாகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மே.இ.தீவுகள் அணியிடம் ஆஸ்திரேலிய அணி பருவகாலத் தொடக்கத்தில் தோல்வி அடைந்தது.

6.  டெஸ்ட் போட்டியில் 31 ரன்களில் இந்திய அணி பெற்ற வெற்றி என்பது, குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். அடிலெய்டைத் தொடர்ந்து, கடந்த 2004-05-ம் ஆண்டு மும்பையில் ஆஸ்திரேலியாவை 13 ரன்கள் வித்தியாசத்திலும், 1972-73-ம் ஆண்டு ஈடன் கார்டனில் இங்கிலாந்தை 28 ரன்களிலும் இந்திய அணி வென்றுள்ளது.

7.  ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து உள்ளநாட்டில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவது 2-வது முறையாகும்.

8.  இந்தியா முதலில் பேட் செய்து 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து, அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இது 3-வது முறையாகும். ஆனால், வெளிநாட்டில் இதுபோன்று வெற்றி பெறுவது முதல் முறையாகும். முதல் இருவெற்றிகள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகக் கடந்த 1974-75-ம் ஆண்டிலும், 2004-05-ம் ஆண்டு மும்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இந்திய அணி வெற்றி பெற்றது.

9. ஒரே ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளிலும் டெஸ்ட் போட்டியில் வென்ற ஒரே ஆசிய நாட்டு அணியின் கேப்டன் விராட் கோலி ஆவார். இது கோலியின் புதிய சாதனையாகும்.  2018-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாண்டரர்ஸ் மைதானத்திலும், இங்கிலாந்துக்கு எதிராக டிரன்ட்பிரிட்ஜிலும், தற்போது அடிலெய்டிலும் கோலி தலைமையில் வெற்றி கிடைத்துள்ளது.

10.  ஒரே டெஸ்ட் போட்டியில் 35 கேட்சுகள் பிடிக்கப்பட்டு இந்த அடிலெய்ட் டெஸ்டில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2-வது இன்னிங்ஸில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணி வீரர்களும் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட போல்ட் ஆகவில்லை. இதற்கு முன் கேப்டவுனில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த டெஸ்டில் 34 கேட்சுகள் பிடிக்கப்பட்டு இருந்தன.

11.  இதற்கு முன் ஜோகன்ஸ்பர்க், டிரண்ட் பிரிட்ஜ், அடிலெய்ட் ஆகிய மைதானத்தில் இந்திய அணி வென்றபோதெல்லாம் சட்டீஸ்வர் புஜாரா அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12.  டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தோல்வி அடையாமல் இருக்கும் கேப்டனில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை கோலி 20 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்று, அதில் 16 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் டிராவும் செய்துள்ளார். 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் உள்ளார்.

13. ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் தனது 5 ஆயிரம் ரன்களை 2002-ம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் 148 ரன்கள் சேர்த்த போது எட்டினார். புஜாரா தனது 5 ஆயிரம் ரன்களை அடிலெய்டில் முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் சேர்த்த போது எட்டினார். இருவருமே 108-வது இன்னிங்ஸில் தங்களின் 5 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.

14.  ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் டெஸ்ட்டிலேயே உள்நாட்டில் தோல்வி அடைவது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் 2016-17-ம் ஆண்டில் பெர்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், 1988-99-ல் பிரிஸ்பேனில் மே.இ.தீவுகள் அணியிடமும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

15.   டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும். இதற்கு முன் மும்பையில் ஆஸ்திரேலிய அணியை 13 ரன்கள் வித்தியாசத்திலும், 2004-ல் இங்கிலாந்தை 28 ரன்களிலும் வென்றிருந்தது இந்தியா. 2002-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் மே.இ.தீவுகள் அணியை 37 ரன்களிலும், கிங்ஸ்டனில் 41 ரன்களிலும் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x