Published : 10 Dec 2018 12:57 PM
Last Updated : 10 Dec 2018 12:57 PM

‘அற்புதமான தொடக்கம்; 2003-ம் ஆண்டு ஞாபகம் வந்துவிட்டது’ - இந்திய அணிக்கு சச்சின் பாராட்டு

வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தைக் கொடுத்து 2003-ம் ஆண்டு நினைவுகளை ஏற்படுத்திவிட்டீர்கள் என்று அடிலெய்ட் டெஸ்டில் வென்ற இந்திய அணிக்கு லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆஸ்திரேலியப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது இதுதான் முதல்முறை என்பதால், வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் பெறும் 6-வது வெற்றி இதுவாகும்.

இந்திய அணியின் வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ அருமையான வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளீர்கள். இந்திய அணிக்கு எனது பாராட்டுக்கள். இந்திய அணி இந்த உற்சாகத்தை, அழுத்தத்தை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. இரு இன்னிங்ஸிலும் முக்கியமான கட்டத்தில் புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது. 4 பந்துவீச்சாளர்களும் தங்களின் பணியை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். எனக்கு 2003-ம் ஆண்டு பெர்த் டெஸ்டில் வெற்ற பெற்ற நினைவுகளை ஏற்படுத்திவிட்டது இந்த வெற்றி” எனத் தெரிவித்துள்ளார்.

புஜாரா குறித்து சச்சின் பாராட்டியதற்கு அவர் நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளார். புஜாரா பதிவிட்ட ட்வீட்டில் “ சச்சின் சகோதரருக்கு மிகப்பெரிய நன்றி. பல இனிய நினைவுகளை இந்த வெற்றி உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x