Last Updated : 10 Dec, 2018 12:30 PM

 

Published : 10 Dec 2018 12:30 PM
Last Updated : 10 Dec 2018 12:30 PM

ஐஸ் மாதிரி கூலாக இருப்பேனு சொல்ல மாட்டேன்’; இப்போ அமைதி முக்கியம்: கோலி பளீர்

அடிலெய்ட் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளபோதிலும்கூட, இப்போதுநாம் அமைதியாக இருப்பது முக்கியம், ஆனால், 'ஐஸ்' மாதிரி 'கூலாக' இருப்பேனு சொல்லமாட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆஸ்திரேலியப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது இதுதான் முதல்முறை என்பதால், வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் பெறும் 6-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றிக்கு முக்கியமாக 4 பந்துவீச்சாளர்களும், சட்டீஸ்வர் புஜாராவின் சதமும் முக்கியக்காரணமாகும். வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி ஊடகத்திடம் கூறியது ‘‘வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். டெஸ்ட் போட்டியில் வெற்றி, தோல்விகள் நடப்பது இயல்பானது. எங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியினர் சிறப்பாக விளையாடினார்கள், நாங்களும் சிறப்பாகத் திட்டங்களை வகுத்துச் செயல்பட்டோம் என்று தெரிவித்தார்.

நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவரா என்று நிருபர் கேட்டதற்கு கோலி கூறுகையில், “ நான் 'ஐஸ்' மாதிரி மிகவும் 'கூல்' ஆனவன் என்று சொல்லமாட்டேன். அப்படிக் காட்டிக்கொள்ளவும் முயற்சிப்பது இல்லை. பும்ரா தொடர்ந்து பந்துவீசுவதாக தெரிவித்தார். ஆனால், ஓய்வு எடுங்கள் என்று கூறினேன்.

அணியில் உள்ள 4 பந்துவீச்சாளர்களும் 20 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த காலத்தில் செய்யாததை நாங்கள் இப்போது செய்திருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக அணியினர் இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்களைப் போல், பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்கை வெளிப்படுத்தினார்கள். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினால், ஒவ்வொரு போட்டியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். ஒட்டுமொத்தமாக நாங்கள் சிறந்த அணி, வெற்றி பெற்று இருக்கிறோம்.

புஜாராவின் சதத்தை புகழவார்த்தைகள் இல்லை. அவரின் தீர்மானமான பேட்டிங்கை மீண்டும் வெளிப்படுத்திவிட்டார். 2-வது இன்னிங்ஸில் ரஹானே சிறப்பாக பேட் செய்தார். நடுவரிசை வீரர்களும், கடைசிவரிசை வீரர்களும் இன்னும் நிலைத்து பேட் செய்திருந்தால், கூடுதலாத 35 ரன்கள் கிடைத்திருக்கும். வெற்றி இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம் “ எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பைன் கூறுகையில், “ எங்களுக்கு இந்தத் தோல்வி சிறிது அதிர்ச்சிதான். இந்தியா வெற்றி பெறும் முயற்சியில் விளையாடினார்கள். நாங்களும் முயற்சித்தோம். ஆனால், எங்களின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. இரு அணிகளிலும் இருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் புஜாரா இருந்தார். நம்பிக்கையுடன் பெர்த் மைதானத்தில் எதிர்கொள்வோம். டெஸ்ட் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x