Published : 29 Nov 2018 04:01 PM
Last Updated : 29 Nov 2018 04:01 PM

ஆஸி. பவுலிங்குக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் செய்ய வேண்டியது என்ன?: ஆகாஷ் சோப்ராவின் 5 முக்கிய ஆலோசனைகள்

ஆஸ்திரேலியாவில் பேட் செய்வதென்பது இங்கிலாந்திலோ, தென் ஆப்பிரிக்காவிலோ பேட் செய்வது போல் அல்ல, மிகவும் நுட்பமான வித்தியாசங்கள் உள்ளதை கிரிக்கெட் நிபுணர்கள் எப்போதும் அங்கீகரித்தே வந்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஸ்விங் இருக்கும், பிட்சில் பெரிய அளவுக்கு கூடுதல் பவுன்ஸ் இருக்காது, நாள் முழுதும் ஸ்விங் ஆகும், ஸ்விங் இல்லையெனில் இங்கிலாந்து பிட்சும் பைசலாபாத் பிட்சும் ஒன்றுதான், ஆனால் ஸ்விங் இல்லாத நாள் அங்கு கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு டென்னிஸ் பந்து பவுன்ஸ் இருக்கும் பெரிய ஸ்விங் இருக்காது, ஆனால் பந்துகள் பிட்ச் ஆன பிறகு வரும் வேகம் மற்றும் பவுன்சில் மாற்றங்கள் இருக்கும் இது வேறு விதமான ஒரு சவால்.

ஆஸ்திரேலியாவில் முதல் 2 மணி நேரம் முதல் 2 நாட்கள் ஆட்டம் சவால், எப்போதும் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். இதனால் முன்னால் சென்று ஆடுவது ஆபத்து, அதற்காக ஷார்ட் பிட்ச் பந்துகளையே எதிர்நோக்கியிருக்கும் போது ஃபுல் லெந்த் பந்துகளில் பவுல்டு, எல்.பி., விக்கெட் கீப்பர் கேட்ச்களுக்கு ஆட்டமிழப்பதும் சகஜமே. இங்கு முன் காலை நீட்டி லெந்த பந்தை கவர் டிரைவ் ஆடினால் பவுன்ஸ் காரணமாக பந்து கல்லிக்குச் செல்லும் எனவே முதல் 2 மணி நேர ஆட்டத்தில் கவர் ட்ரைவ் பந்து வந்தாலும் அதைக் கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும், ஒருமுறை பவுன்ஸுக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு விட்டால் பேட்டிங்கே மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை சேவாக், லஷ்மண், சச்சின் போன்றவர்கள் நமக்குக் காட்டியுள்ளனர், இது பற்றி பேசியுமுள்ளனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தி ஒன்றில் ஆஸி பிட்ச்களில் இந்திய பேட்ஸ்மென்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்:

லெந்த்தை சரியாகக் கணிக்க வேண்டும்:

இந்திய பிட்ச்களில் பவுன்ஸ் குறைவாக இருக்கும் என்பதால் பந்தின் லைன் என்ன என்பதை கணித்தால் போதுமானது. பவுன்ஸ் குறைவாக இருப்பதால் நம் கணிப்பில் தவறு இருந்தாலும் முன் காலில் சென்று பாதுகாப்பாகவோ, அடித்தோ ஆடிவிட முடியும்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் பந்தின் லைனை கணிப்பதை விட முதலில் லெந்த்தைக் கணிக்க வேண்டும். கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால் இங்கு எல்.பி., பவுல்டு வாய்ப்பு குறைவு ஆகவே தடுப்பாட்டத்தை இன்னும் தன்னம்பிக்கையுடன் ஆட முடியும்.

ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிரான தடுப்பு உத்தி:

ஆஸ்திரேலியாவில் ஷார்ட் பிட்ச், பவுன்சருக்கு எதிராக சிறப்பான தடுப்பு உத்தி இருப்பது மிக மிக முக்கியம். இந்தியாவில் மைதானங்கள் சிறியது என்பதால் ஷார்ட் பிட்ச் பந்துகளை முன் காலில் ஆடியே பவுண்டரிக்கு அனுப்பலாம், தூரம் குறைவு என்பதால் பந்துகள் டாப் எட்ஜ் ஆனாலும் சிக்ஸ், அல்லது பவுண்டரியாகும். ஆனால் ஆஸ்திரேலியாவில் பவுன்சர் பொறியிலிருந்து மீள்வது கடினம். ஆகவே பிரித்வி ஷா, ரிஷப் பந்த் நல்ல தடுப்பு உத்தி, ஆடாமல் விடும் உத்தியை வளர்த்தெடுப்பது அவசியம்.

மட்டையை நேராக வைத்து ஆடுவதா அல்லது கிடைக்கோட்டு மட்டையில் ஆடுவதா?

பந்துகள் பேட்டுக்கு நன்றாக வரும் என்பதால் அடித்து ஆடும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆனால் ஷாட் தேர்வில் மிகத் துல்லியமாக இருப்பது அவசியம். ஷாட் தேர்வு முடிவை வெகு விரைவில் எடுக்க வேண்டும். அதாவது நேர் மட்டையில் ஆடப்போகிறோமா அல்லது படுக்கைவசமாக மட்டையைப் பிடித்து அடிக்கப் போகிறோமா என்பதில் தெளிவு முக்கியம். மட்டையை ஒரு கோணமாக வைத்து ஆடுவது இந்திய பிட்ச்களுக்கு சரிவரும் அங்கு சரிப்படாது.

ஃபுல் லெந்த் பந்துகள் கவனம்:

ஆஸ்திரேலியா என்றால் ஷார்ட் பிட்ச் பவுலிங், எகிறு பந்துகள், பின்னங்காலில் ஆட வேண்டும் குறுக்குசால் மட்டை அவசியம் என்று அறிவுரைகள் வந்தாலும், ஆஸ்திரேலியாவில் ஃபுல் லெந்த் பந்துகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன என்பதும் சரிசம உண்மையே. ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி நம்மை பின் காலுக்குத் தள்ளி, கிரீசுக்குள் தள்ளி புல் லெந்த் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள்.

ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி?

இந்திய பிட்ச்களில் ஸ்பின் ஆடுவதை விட ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்பின் ஆடும்போது இன்னும் கவனம் தேவை, ஏனெனில் இங்கு பொதுவாக மிகவும் குனிந்து தடுப்பாட்டம் ஆடுவோம், ஆனால் அங்கு பந்து கொஞ்சம் கூடுதலாக எழும்பும் என்பதால் மிகவும் குனிந்து ஆடினால் பந்து மட்டையின் நடுவில் படாமல் மட்டையின் மேல்விளிம்பில் பட்டு கேட்ச் ஆகும் வாய்ப்புள்ளது. ஸ்பின் பவுலிங்கை பின்னங்காலில் சென்று ஆடி ரன் அடிக்கலாம் என்பது ஒரு தெரிவு. கொஞ்சம் ஷார்ட் ஆக வீசினாலும் புல் ஷாட் வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x