Published : 20 Nov 2018 04:23 PM
Last Updated : 20 Nov 2018 04:23 PM

கங்குலி ட்வீட் செல்வாக்கினால் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் ஜோ ரூட்?

2018 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஏலம் எடுக்காமல் புறக்கணித்தது, இன்றைய கிரிக்கெட் உலகில் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்மித், ஜோ ரூட் ஆகியோர் சிறந்த 4 பேட்ஸ்மென்களாகக் கருதப்படுகின்றனர்.

இந்நிலையில் ஜோ ரூட் இலங்கைக்கு எதிராக கடுமையாக பந்துகள் ஸ்பின் ஆகும் பிட்சில் மிகப்பிரமாதமான மேட்ச் வின்னிங் 124 ரன்களை அடித்ததையடுத்து சவுரவ் கங்குலி பாராட்டு மழை பொழிந்தார் ஜோ ரூட் மீது.

இந்த ட்வீட்டின் செல்வாக்கினால் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சக உரிமையாளர்  பார்த் ஜிண்டால், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை டெல்லி அணியில் சேர்க்க முடிவெடுக்கப் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

டெல்லி டேர் டெவில்ஸ் அணி உரிமையாளர் மட்டத்தில் அணி விவகாரத்தில் கங்குலி ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கங்குலி,  ஜோ ரூட் சதத்தைப் புகழும் தன் ட்வீட்டில் டெல்லி டெர் டெவில்ஸ் அணியின் சக உரிமையாளர் பார்த் ஜிண்டாலை டேக் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் கங்குலி கூறியிருப்பதாவது:

“இங்கிலாந்து, மற்றும் ஜோ ரூட் அந்த பிட்சில் என்ன மாதிரி ஆடிவிட்டனர். பந்துகள் சதுர வடிவில் திரும்பும் பிட்சில் டெஸ்ட் போட்டிகளின் சிறந்த சதங்களில் ஒன்றை ஜோ ரூட் அடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

2016-ல் உலக டி20 தொடரில் ஜோ ரூட் பிரமாதமாக ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்களை விரட்ட உதவிய ஜோ ரூட்  மே.இ.தீவுகளுக்கு எதிராக இறுதிப் போட்டியில் தொடக்கப் பந்து வீச்சில் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டி20 கிரிக்கெட் மீது பற்றுள்ள ஜோ ரூட், ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். ஆனால் அடிப்படை விலை ரூ.1.5 கோடிக்கு அவர் விலை போகவில்லை.

இதனையடுத்து ஜோ ரூட் ஏமாற்றம் தெரிவித்த போது, ‘நான் ஏமாற்றமடைந்தேன். நிறைய டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதே என் விருப்பம். ஐபிஎல் விளையாடி பணம் சம்பாதிக்க அல்ல” என்று கூறியிருந்தார். கடைசியில் சிட்னி தண்டர் அணிக்கு 7 போட்டிகள் டி20-யில் ஆடினார்.

ஆனால் கடும் ஷெட்யூலில் ஜோ ரூட்டினால் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் 2019-ல் ஆட முடியுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x