Published : 19 Nov 2018 07:16 PM
Last Updated : 19 Nov 2018 07:16 PM

இந்திய அணிக்கு சோதனை?: ஸ்மித், வார்னர் மீதான தடை நீங்குகிறது; ஆஸி.வாரியம் இந்த வாரத்தில் முடிவு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீதான தடையை விலக்குவது குறித்து இந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் இருவர் மீதான தடை விலக்கப்பட்டு ஆஸி அணியில் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்குப் பெரிய சோதனைக் காலமாக அமையும்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கவாஸ்கர், கங்குலி தலைமையில் மட்டும், தொடரைச் சமன் செய்துள்ளது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத சூழலில் அந்த அணி மிகுந்த பலவீனமாக இருக்கிறது.

இப்போது பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடரை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஸ்மித், வார்னர் அணியில் இடம் பெற்றால், இந்திய அணிக்கு சோதனையாக அமையும்.

இதேபோன்றுதான் கிளிப்பிள்ளை சொல்வதுபோல் இங்கிலாந்து தொடரிலும் இந்தியா வெல்லும் என்று கூறி அனுப்பினார்கள், ஆனால், 4-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி இழந்து வெறும்கையோடு திரும்பியது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது ஒருவகையில் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகவே பொதுவாக பார்க்கப்பட்டது. பந்துவீச்சில் மட்டும் பலமாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மிகுந்த பலவீனமாக இருக்கிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் மோசமாகத் தோற்றது ஆஸ்திரேலியா.

 

இதேத் தோல்வி இந்தியாவிடமும் தொடர்ந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவர் மீதான தடையை விலக்குவது குறித்து முடிவு எடுக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஸ்மித், வார்னர் மீது தடை விதிக்கப்பட்ட பின் சிலமாதங்களில் பயிற்சியாளர் லீ மான் பதவி விலகினார். இருவரின் மீதும் தடை விதிக்க காணமாக இருந்த ஆஸ்திரேலிய வாரியத் தலைவர் டேவிட் பீர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.

மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினரும் வார்னர், ஸ்மித் ஆகியோர் மீதான தடையை நீக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பல்வேறு தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடி வந்துள்ளது. ஸ்மித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தியத் தொடர், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி, ஆஷஸ் கோப்பை என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது இவற்றுக்கு ஆஸ்திரேலிய அணியை தயார் செய்ய வேண்டும் என்பதால், இரு வீரர்கள் மீதான தடையை விலக்க ஆலோசிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் வெளிவுரும் டெய்லி டெலிகிராப் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்குவது குறித்து பரிசீலிக்க இந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூடுகிறது. பெரும்பாலும் தடையை நீக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும், இருவரும் சமீபத்தில் சிட்னி கிளப் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியபோது, ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். ஐபிஎல் போட்டித் தொடரிலும் ஸ்மித், வார்னர் இருவரையும் அணிகள் சேர்த்துக்கொண்டுள்ளன. ஆதலால், ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்குள் விலக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு விலக்கப்பட்டால் இந்திய அணிக்கு சோதனையாகத்தான் அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x