Published : 22 Oct 2018 07:31 AM
Last Updated : 22 Oct 2018 07:31 AM

ரோஹித், கோலி இடையே கடும் போட்டி; இருவரும் அதிரடி சதம் விளாச இந்தியா எளிதில் வெற்றி

குவஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கை கேப்டன் விராட் கோலி (140), ரோஹித் சர்மா (152 நாட் அவுட்) ஆகியோர் படுசுலபமாக விரட்டி 326/2 என்று அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

மே.இ.தீவுகளில் அறிமுக வீச்சாளர் தாமஸின் 147 கிமீ வேக பந்தை தவண் மட்டையில் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொள்ள, சரி ஆட்டம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்தால் விராட் கோலி இறங்கினார், பட் படென்று அல்லது ஸ்ரீகாந்த் கூறுவது போல் டப் டிப்பென்று அடித்து நொறுக்கினார், எட்ஜ்கள் எடுத்தன, தாமஸ் கொஞ்சம் அவரை வேகத்தில் படுத்தினார், முன் விளிம்பில் பட்டது, வெளி விளிம்பில் பட்டது ஆனால் எல்லாம் பவுண்டரி ஆகின. அரைசதத்துக்காக ஒரு கட் ஷாட் அடித்த போது அங்கு பாயிண்டில் நல்ல பீல்டர் இருந்தால், அல்லது உயரமான பீல்டர் இருந்தால் கோலி அவுட் ஆகியிருப்பார், ஆனால் அது பவுண்டரி ஆனது.

ரோஹித் சர்மாவுக்கு முன்னதாக அரைசதமும் சதமும் எடுத்து விட வேண்டும் என்ற இனம்புரியாத ஒரு அவச(ர)ம் கோலியின் பேட்டிங்கில் தெரிந்தது. கோலி 88 பந்துகளில் தன் 36வது சதத்தை எடுத்தார். விரட்டலில் 22வது சதமாகும். ரோஹித் சர்மா தனது 20வது சதத்தை எடுத்தார், இருவரும் சேர்ந்து 246 ரன்களை அனாயசமாக எடுத்து லெக் திசையிலேயே வீசிய மே.இ.தீவுகள் பந்து வீச்சு அதை விட கொடுமையான பீல்டிங் ஆகியவற்றைத் திறம்படப் பயன் படுத்தினர். முன்னதாக மே.இ.தீவுகள் 400 ரன் பிட்சில் 322 ரன்களை மட்டுமே எடுத்தது, ஆனால் மே.இ.தீவுகளைப் பொறுத்தவரை இதுவே ஒரு நல்ல ரன் எண்ணிக்கைதான். 42.1 ஓவர்களில் இந்தியா வென்றது. 90களின் இலங்கையாக இருந்திருந்தால் இதே ஸ்கோரை 32 ஓவர்களில் முடித்திருக்கும்.

கோலியும் ரோஹித்தும் இணைந்து 15-வது சதக்கூட்டணி அமைத்தனர். 200 மற்றும் அதற்கும் மேற்பட்ட கூட்டணி 5வதாகும்.

மே.இ.தீவுகள் அணியில் கெய்ரன் போவெல் அரைசதத்துடன் வெளியேறினார், ஹெட்மையர் அருமையான ஒரு அதிரடி சதம் எடுத்தார், ஆனால் யாராவது ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென் கடைசி வரை நின்றிருந்தால் பிளாட் பிட்சில் உமேஷ் யாதவ், மொகமது ஷமியை உரித்து எடுத்திருக்கலாம், ஆனால் மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்கள் ஏதோ வந்தோமோ அடித்தோமா போனோமா என்று ஆடினர் ஒரு குறிக்கோள் இல்லை, இதனால் தேவேந்திர பிஷூ, கிமார் ரோச் கடைசியில் 6 ஓவர்களில் 44 ரன்கள் வெளுத்தனர், இவர்களே இப்படி அடித்தனர் என்றால் நல்ல பேட்ஸ்மென் இருந்திருந்தால் இன்னும் ஸ்கோர் 350-60 வரை சென்றிருக்கும், அதுவும் கிமார் ரோச், ஷமியை நேராக ஒரு பச் என்று அறை அறைந்த ஷாட் மின்னல் வேகத்தில் பவுண்டரிக்குப் பறந்ததை மறக்க முடியாது.

டெஸ்ட் போட்டிகளில் தடவிய ஹெட்மையர், வெள்ளைப்பந்தை உரித்தார் 78 பந்துகளில் 106, இதில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள். கெய்ரன் போவெலும் அதிரடி அரைசதம் கண்ட பிறகே கொஞ்சம் தள்ளித் தள்ளி ஆடியிருக்க வேண்டும் ஆனால் லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். மர்லன் சாமுவேல்ஸ், சாஹலிடம் செய்யக் கூடாததைச் செய்தார், பந்து வரும் முன்னே காலைத் தூக்கி முழ நீளத்துக்குப் போட்டு நேர் பந்தில் எல்.பி.ஆனார். குல்தீப் யாதவ்வைத்தான் ஆடியிருக்க வேண்டும், ஆனால் இந்திய அணி நிர்வாகத்துக்கு இருக்கும் ஜடேஜா என்ற obsession-ஆல் ஜடேஜா ஆடினார். குல்தீப் யாதவ், ஹெட்மையரை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியபடியே இருந்தார், அவர் இருந்திருந்தால் ஹெட்மையரும் சதம் எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஷமியை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்து ஹெட்மையர் தனது ஒருநாள் 3வது சதம் கண்டார். ஆனால் அவர் சதம் எடுத்த பிறகு ஜடேஜாவை ஸ்வீப் ஆட முயன்று வெளியேறினார். கடைசியில் பிஷூ, ரோச் ஆட்டத்தினால் 322 ரன்கள் வந்தது, இந்தப் பிட்சில் இது போதாது, இது 400 பிட்ச்.

ரோஹித் சர்மா கோலியிடையே கடும் போட்டி:

 

ஒஷேன் தாமஸ் என்ற அறிமுக வீச்சாளர் உயிரோட்டமுள்ள வேகத்தில் வீசினார், 2 ஸ்லிப் வைத்து ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்து, பவுன்சர் என்று அசத்தினார் தாமஸ், ஆனால் மறுமுனையில் கிமார் ரோச் லெக் சைடாகப் போட்டுக் கொடுக்க, தாமஸும் அதிவேகமாக வீசியது இந்தப் பிட்சில் பேட்டிங்குக்கு எளிதாக விராட் கோலி என்ன நடக்கிறது என்று உணரும் மு 35 பந்துகளில் அரைசதம் கண்டார், பாட்டம் ஹேண்ட் பிளிக், கவர் டிரைவ், புல் ஷாட், தூக்கி அடித்த கட் ஷாட் என்று ரோஹித் சர்மாவை விட முன்னதாக அரைசதம் எடுக்க வேண்டும், சதம் எடுக்க வேண்டும் என்ற அவசரம் அவரிடம் ஏனோ பரபரப்பாகத் தெரிந்தது.

பிறகு ஆஷ்லி நர்ஸ், பிஷூ வந்த பிறகு ரோஹித், கோலிக்கு வேட்டைதான் பவுண்டரி மழை பொழியத் தொடங்கியது, ரோஹித் சர்மா சிக்சர் மழை பொழிந்தார். ரோஹித் சர்மா 8 சிக்சர்களை விளாசினா, ஆனால் பவுண்டரிகள் 15, விராட் கோலி பிரிஸ்க் ஆக ஆடி 21 பவுண்டரி 2 சிக்சர். 140 ரன்களில் அவர் பிஷூவின் லெக் ஸ்பின்னுக்கு ஸ்டம்ப்டு ஆனார்.

ரோஹித் சர்மா 84 பந்துகளில் சதம் கண்டார், ஆனால் மொத்தமாக 117 பந்துகளில் 15 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 152 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ரோஹித் சர்மாவின் 8 சிக்சர்களும் மிக அழகானவை. பின்னால் சென்று புல் ஷாட்டில் வேகப்பந்தை, ஸ்பின்னை அடித்தாலும் மேலேறி வந்து ஸ்பின்னர்களைத் தூக்கினாலும் அவரது சிக்சர்கள் பார்க்க மிக அருமையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுபவை. அதே போல் விராட் கோலியின் அனாயசமான ஒரு அவசர இன்னிங்ஸ், அலட்சியமான ஒரு புறக்கண்டிப்புடன் மே.இ.தீவுகள் பவுலிங்கை கையாண்டர் விராட் கோலி.

42.1 ஓவர்களில் 326/2 என்று இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார், இதை ஒரு போட்டியாக மாற்றிய ஹெட்மையருக்குக் கொடுத்திருக்கலாம். உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடப்பதை வைத்து பிட்சை 400 ரன் பிட்சாக அமைக்கின்றனர், இந்தத் தொடர் முழுதும் இப்படிப்பட்ட பிட்ச்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 5 போட்டிகளிலும் கோலி ஆடினால் 1000 ரன்களை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தச் சாதனை, இந்தச் சாதனை என்று ஊடகங்களும் வாயை மெல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x