Published : 18 Oct 2018 05:50 PM
Last Updated : 18 Oct 2018 05:50 PM

‘யாரைப்பற்றியும் எனக்கு கவலையில்லை;நான் இப்படித்தான்’: பும்ரா ஆவேசம்

நான் பந்துவீசும் முறை குறித்து யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, எனக்கு எது வசதியாக இருக்கிறதோ அத்தன்படிதான் பந்துவீசுவேன் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பந்துவீசும் ஸ்டைலைப் பார்த்த பாகிஸ்தான் வீரர் அக்யூப் ஜாவித் விமர்சனம் செய்திருந்தார். இதுபோல் தொடர்ந்து பந்துவீசினால் அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்புண்டு எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் தனியார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பும்ராவிடம் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து பாகிஸ்தான் வீரர் விமர்சனம் செய்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

பந்துவீச்சு வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் அல்லது சொல்லவில்லை என்பது குறித்து எனக்குக் கவலையில்லை. அதில் கவனம் செலுத்துவதும் இல்லை. எனக்கு எது உதவியாக இருக்கிறதோ, என் உடம்புக்கு உகந்ததாக இருக்கிறதோ அதில்மட்டும் கவனம் செலுத்துகிறேன்.

கிரிக்கெட்டில் எதுவுமே சிறந்த ஸ்டைல், பந்துவீச்சு முறை என்று இல்லை. கிரிக்கெட்டில் காயம் ஏற்படாத ஒருவீரரைக் காட்டுங்கள் பார்க்கலாம். காயம் ஏற்படாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மட்டும் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஆஸ்திரேலிய ஆடுகளத்தைப் பற்றி என்னிடம் கேட்டால் அங்குள்ள ஆடுகளங்களைப் பார்க்காமல் நான் எப்படி பதில் அளிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களில் பந்து அதிகமாக எழும்பு, அதேசமயம், அதிகமாக ரன்களை ஸ்கோர் செய்யவும் முடியும்.ஆஸ்திரேலியத் தொடருக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இப்போதே அது குறித்து நான் கவனம் செலுத்தவில்லை, மிக அருகே இருக்கும் போட்டியின் மீதுதான் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஆஸ்திரேலியாவுக்குப் போன பின்புதான் அங்குள்ள ஆடுகளங்களைப் பார்த்து அறிய முடியும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட முடியும். நான் தொடர்ந்து எங்களுடைய பந்துவீச்சுப் பயிற்சியாளருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அவரின் ஆலோசனையில் பந்துவீசுகிறேன். என்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து நான் பயிற்சி பெற்று வருகிறேன்.

மிகப்பெரிய தொடருக்குப்பின் ஓய்வு கொடுப்பது அடுத்து வரும் போட்டிகளை மிகவும் உற்சாகத்துடன் எதிர்கொள்ள உதவும். ஓய்வுக்குப்பின்தான் பசி எடுக்கும், உத்வேகத்துடன் பசியுடன் விளையாட முடியும். இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x