Published : 18 Oct 2018 05:02 PM
Last Updated : 18 Oct 2018 05:02 PM

ஐபிஎல் போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் விளையாடினால் போதுமா?- அப்ரிடி கேள்வி

கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால், இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியைத் தவிர்த்து மற்ற நாட்டு லீக்குகளிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரர் இங்கிலாந்து கவுண்டி போட்டியைத் தவிர்த்து வேறு எந்த நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதுஇல்லை. இதற்கான தெளிவான விளக்கத்தையும் பிசிசிஐ இதுவரை அளிக்கவில்லை.

இந்திய வீரர் யூசுப் பதான் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் ஹாங்காங் லீக், ஆஸ்திரேலியன் லீக், கரிபீயன் லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரியும் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. ஆனால், மற்ற நாட்டு வீரர்கள் யார் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாட பிசிசிஐ அனுமதிக்கிறது.

இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்பிடி தி கல்ப் நியூஸ்க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கிரிக்கெட் விளையாட்டை வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு வளர்க்க வேண்டும். நீங்கள் கிரிக்கெட் லீக் ஆட்டங்களில் விளையாடும் போது, நீங்கள் கிரிக்கெட் போட்டியை ஆதரிக்கிறீர்கள், எந்த நாடு லீக் போட்டியை நடத்துகிறதோ அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டையும் ஆதரிக்கிறீர்கள். ஆனால், மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து லீக்குகளிலும் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் உள்ள வீரர்கள் மட்டும் ஐபிஎல் தவிர்த்து எந்த நாட்டு லீக் போட்டிகளிலும் விளையாட அந்நாட்டு வாரியம் அனுமதிப்பது இல்லை. இது தவிர்க்கப்பட வேண்டும். இந்திய வீரர்களும் மற்ற நாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நட்பு நாடுகளிலும் கிரிக்கெட்போட்டி வளரும் எனத் தெரிவித்தார்

தற்போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடி ஆப்கானிஸ்தான் லீக் போட்டியில் பக்தியா பாந்தர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் அணியில் இருந்து அப்ரிடி ஓய்வு பெற்றுவிட்டபோதிலும், 14 வகையான அணிகளில் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், ஹாம்ப்ஷையர், நார்த்தாம்டன்ஷையர், இஸ்லாமாபாத் அணி, பாகிஸ்தான் ஏ ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x