Last Updated : 18 Oct, 2018 03:17 PM

 

Published : 18 Oct 2018 03:17 PM
Last Updated : 18 Oct 2018 03:17 PM

‘தவறு செய்துவிட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்’ - 6 ஆண்டுகளுக்குப்பின் சூதாட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு கண்ணீர் விட்ட பாகிஸ்தான் வீரர்

6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் ர் டேனிஷ் கணேரியா விளையாடினார். அப்போது அனு பாட் என்ற சூதாட்ட புரோக்கருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கணேரியாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் வெஸ்ட்பீல்ட் சூதாட்ட சர்ச்சை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கணேரியாவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து, அவரை பாகிஸ்தான் அணியில் இருந்துநீக்கப்பட்டார். மேலும் இங்கிலாந்துகவுண்டி போட்டியில் விளையாட வாழ்நாள் தடைவிதித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கணேரியாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு தடை விதித்தது.

ஆனால், டேனிஷ் கணேரியா தான் ஒருபோதும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். கணேரியாவுக்கு அடுத்து சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமிர், ஆகியோருக்கு 5ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதில் முகமது அமிர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்குள் வந்துவிட்டார், சல்மான்பட், முகமது ஆசிப் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

ஆனால், கணேரியா மட்டும் தான் குற்றமற்றவர் என்று கூறி வந்தார். இந்நிலையில், அல்ஜஸிரா தொலைக்காட்சிக்கு கணேரியா நேற்று பேட்டி அளித்தார். அப்போது, 6 ஆண்டுகளுக்குப் பின் தான் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை என்று ஒப்புக்கொண்டார். இதைக் கேட்டதும் இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பேட்டியின் போது கணேரியா கூறுகையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள், என்னுடைய ரசிகர்கள், பாகிஸ்தான் மக்கள் அனைவரும் எனது சூழலை புரிந்து கொண்டு என்னை மன்னித்து விடுங்கள். நான் சூதாட்ட தரகர் அனு பாட்டுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் சூதாட்டத்தில் ஈடுபட்டதுஉண்மைதான் என்னை மன்னித்து விடுங்கள். அதற்கான விலையைக் கடந்த 6 ஆண்டுகளாக நான் கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். முன்னாள் கேப்டன் அப்துல் லத்தீப் கூறுகையில், நான் கணேரியா குற்றமற்றவர் என்று இத்தனை நாட்களும் நம்பிக்கொண்டிருந்தேன். அவரின் ஒப்புதல் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.

முன்னாள் லெக்ஸ்பின்னர் அப்துல் காதிர் கூறுகையில், கணேரியாவின் ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும். இதுபோன்ற வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கடவுளுக்கு தெரியும். தவறான செயல்கள், ஸ்பாட் பிக்ஸிங், ஊக்கமருந்து போன்றவற்றுக்குக்கூட நாம் விளம்பரம் தேடுகிறோம். கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டு இப்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்த கணேரியாவை நினைத்து வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கணேரியா இதுவரை 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கணேரியா எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x