Published : 18 Oct 2018 02:26 PM
Last Updated : 18 Oct 2018 02:26 PM

கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா ரவிந்திர ஜடேஜா?-மே.இ.தீவுகள் ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்பு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவிந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல்போட்டி வரும் 21-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.

ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்த ரவிந்திர ஜடேஜா, ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் தொடரிலும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், முதல் இருபோட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அடுத்து வரும் 3 போட்டிகளுக்கான அணியிலும் ஜடேஜாவுக்கு ஆல்ரவுண்டர்கள் என்ற அந்தஸ்தில் இடம் உறுதியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல், டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் வீரரான கபிலதேவ் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 42 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரியும்3.62 ஆகவும், ஒரேமுறை மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதுதான் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக எடுத்துள்ள அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும்.

இந்நிலையில் கபில்தேவின்  இந்த சாதனையை எட்டுவதற்கு ரவிந்திர ஜடேஜாவுக்கு இன்னும் 15 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. 5 ஒருநாள் போட்டிகளில் இந்த 15 விக்கெட்டுகளை ஜடேஜா எட்டுவார் என நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் நல்ல பார்மில் இருப்பதாலும், அவர் இந்த சாதனையை எட்டிப்பிடிப்பார் எனத் தெரிகிறது.

கபில்தேவைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 41 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 33 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஜடேஜா 19 போட்டிகளில் இதுவரை 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 15 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திவிட்டால் அது வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படும்.

ஆசியக் கோப்பைத் தொடரில் ஜடேஜா 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், ராஜ்கோட் டெஸ்ட்போட்டியில் 4 விக்கெட்டுகளையும், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x