Last Updated : 18 Oct, 2018 01:56 PM

 

Published : 18 Oct 2018 01:56 PM
Last Updated : 18 Oct 2018 01:56 PM

‘ஸ்மித், வார்னர் இல்லாவிட்டால்கூட ஆஸி. தொடர் சவால்தான்’: காரணத்தை விளக்கும் புவனேஷ்வர் குமார்

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாவிட்டால் கூட ஆஸ்திரேலியத் தொடர் மிகுந்த சவாலானதாகவே இந்தியஅணிக்கு இருக்கும் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் தொடரிலும் புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது ஓய்வில் இருக்கும் புவனேஷ் குமார் நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் டெல்லியில் பங்கேற்றபோது அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியத் தொடர் சவாலாக எங்களுக்கு இருக்காது என்று யார் சொன்னது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாவிட்டால் கூட ஆஸ்திரேலியத் தொடர் நிச்சயம் சவாலாகவே இருக்கும்.

ஏனென்றால், நாம் நாட்டைவிட்டு வெளிநாட்டில் விளையாடுகிறோம். காலநிலை, சூழல் நிச்சயம் வேறுவேறாக இருக்கும், அப்போது அதற்கு ஏற்றார்போல் நாம் மாறிக்கொண்டு விளையாடுவது சவால்தான். இந்த காலத்தில் எந்தச் சூழலுக்கும் உடனடியாக மாறிப் பந்துவீசுவது என்பது பந்துவீச்சாளர்களுக்கு எளிதானது அல்ல.

ஸ்மித், வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்குப் பாதகமானதா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், அனைத்து அதையும் மீறி அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பலமுறை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலய வீரர்களுக்கு உள்நாட்டு மைதானம் என்பதால், அவர்களுக்குக் காலநிலையும், சூழலும் எளிதாக இருக்கும். ஆனால், நம்மைப் பொருத்தவரை ஸ்மித், வார்னர் இல்லாவிட்டாலும்கூட ஆஸ்திரேலியத் தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது.

நமக்குத் தொடர் எளிதாக இருந்திருந்தால், நாம் கடந்த காலத்தில் பல தொடர்களை வென்றிருந்திருப்போம். ஆதலால், வரும் தொடரும் எளிதாக இருக்காது. நாம் எப்படி தயாராகிறோம், பயிற்சிப் போட்டிகள் எத்தனை விளையாடுகிறோம் என்பதில் நம்முடைய தயாராகும் திறமை இருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர்களை தற்போது அணியில் நிர்வகிக்கும் முறை சிறப்பாக இருக்கிறது, சுழற்சிமுறையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதேசமயம், மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து விளையாடுவது அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது, ஓய்வில் இருப்பவர்களுக்கு அடுத்துவரும் போட்டிகளை உற்சாகத்துடன் எதிர்கொள்ள வைக்க முடிகிறது.

நீண்டதொடர்களில் விளையாடிவிட்டு வரும் போது, ஓய்வு என்பது அவசியமாகும். மனதீரியாக நாம் சோர்வடைந்துவிடுவோம். போதுமான ஓய்வு அளிக்கும் போது, அடுத்த போட்டித்தொடருக்கு தயாராக உதவியாக இருக்கும். இவ்வாறு புவனேஷ்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x