Published : 18 Oct 2018 10:10 AM
Last Updated : 18 Oct 2018 10:10 AM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் 145 ரன்களுக்கு சுருண்டது ஆஸி. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு சுருண்டது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 81 ஓவர்களில் 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பஹர் ஸமான் 94, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 94 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டிருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் 4, லபஸ்ஹக்னே 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 3, பீட்டர் சிடில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது அப்பாஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். ஆரோன் பின்ச் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 50.4 ஓவர்களில் 145 ரன்ளுக்கு சுருண்டது.

ஆரோன் 39, ஷான் மார்ஷ் 3, டிரெவிஸ் ஹெட் 14, மிட்செல் மார்ஷ் 13, லபஸ்ஹக்னே 25, கேப்டன் டிம் பெயின் 3, மிட்செல் ஸ்டார்க் 34, நாதன் லயன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அப்பாஸ் 5, பிலால் ஆசிப் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 44 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

பஹர் ஸமான் 66, மொகமது ஹபீஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அசார் அலி 54, ஹாரிஸ் சோகைல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 281 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x