Last Updated : 16 Oct, 2018 07:33 PM

 

Published : 16 Oct 2018 07:33 PM
Last Updated : 16 Oct 2018 07:33 PM

ஒருநாள் தொடர்; இந்திய அணியில் திடீர் மாற்றம்: பிசிசிஐ அறிவிப்பு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் பிசிசிஐ இன்று திடீரென மாற்றம் செய்துஅறிவித்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் இரு போட்டிகளுக்கு மட்டும் வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதில் முதல் முறையாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, 10 பந்துகள் வீசிய நிலையில், காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகக் குணமாகவில்லை, அந்த காயம் குணமாக நீண்ட காலம் ஆகும் என்பதால், ஒருநாள் தொடரில் இருந்து ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.

ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தி உமேஷ் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டார். இதையடுத்து, உமேஷ் யாதவ் முதல் இரு போட்டிகளுக்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் காயத்தால் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை சேர்க்கத் தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஒருநாள் போட்டி வரும் 21-ம் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி 24-ம் தேதி விசாகப்பட்டிணத்திலும் நடைபெற உள்ளது.

முதல் இரு போட்டிகளுக்கான அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x