Published : 16 Oct 2018 06:28 PM
Last Updated : 16 Oct 2018 06:28 PM

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

பேட்டிங் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட், ஹைதராபாத்தில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

வரும் 21-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அதிகமான ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 1,573 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். இவர் 27 ஒருநாள் போட்டிகளில் 1,387 ரன்கள் சேர்த்துள்ளார்.

சச்சின் சாதனை ரன்களை எட்டிப்பிடிக்க விராட்கோலிக்கு இன்னும் 186 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதை இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி கடந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 1573 ரன்கள் குவித்து, 52.73 சராசரியும், 4 சதங்கள், 11 அரைசதங்கள் அடித்துள்ளார்.

விராட் கோலி 27 போட்டிகளில் 4 சதங்கள், 9 அரைசதங்கள் உள்ளிட்ட 1,387 ரன்களுடன், 60 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

3-வது இடத்தில் ராகுல் டிராவிட் 40 போட்டிகளில் 1,348 ரன்களுடன் 42.12 சராசரி வைத்துள்ளார். கங்குலி 27 போட்டிகளில் 1,142 ரன்கள் சேர்த்து 4-வது இடத்தில் உள்ளார்.

33 போட்டிகளில் விளையாடியுள்ள எம் எஸ் தோனி 899 ரன்கள் சேர்த்துள்ளார். இவர் ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 101 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x