Last Updated : 15 Oct, 2018 05:05 PM

 

Published : 15 Oct 2018 05:05 PM
Last Updated : 15 Oct 2018 05:05 PM

இலங்கை முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா மீது ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு கிடுக்கிப்பிடி

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை இருமுறை மீறியதாக இலங்கை முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஜெயசூரியா பதில் அளிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுடன் ஒத்துழைக்காதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சி அல்லது ஆதாரங்களை அழிப்பது ஆகியவை தொடர்பான விவகாரங்களில் ஜெயசூரியா மீது புகார் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்.2017 வரை ஜெயசூரியா தலைமைத் தேர்வாளராக இருந்தார், கடும் விமர்சனங்களுக்குப் பிறகு இவரும் இவரது கமிட்டி உறுப்பினர்களும் மொத்தமாக ராஜினாமா செய்தனர். முன்னதாக 2013 தொடக்கத்திலிருந்து 2015 உலகக்கோப்பை வரையும் அணித்தேர்வு தலைமைப் பொறுப்பில் இருந்தார் ஜெயசூரியா. இதில் 2வது முறையாக அவர் இருந்த போது முறைகேடுகள் புகார் எழுந்தது. கடந்த ஆண்டு ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு ஜெயசூரியா தன் தொலைபேசியை ஒப்படைக்கவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

“ஜெயசூரியா பதில் அளிக்கும் வரை ஐசிசி இது குறித்து மேலும் தகவல்கள் எதையும் பகிராது” என்று ஐசிசி அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் தொடர்பாக ஐசிசி விசாரணை ஓராண்டாக நடைபெற்று வருவது. கிரிக்கெட் ஊழல் குறித்து இலங்கை அதிபர், பிரதமர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருக்கும் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு தகவல் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x