Published : 15 Oct 2018 03:30 PM
Last Updated : 15 Oct 2018 03:30 PM

கெய்ல் முன்னிலையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்.. யுவராஜ் சிங் அதிவேக அரைசத சாதனை சமன்: ஆப்கான் வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் அதிரடி

ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் டி20 போட்டியில் தனது லட்சிய வீரரான கிறிஸ் கெய்ல் முன்னிலையில் காபூல் ஸ்வானன் அணி இடது கை வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய், பால்க் லெஜண்ட்ஸ் அணியின் இடது கை ஸ்பின்னரை ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.

மேலும் 5வது சிக்சரை அடிக்கும்போது 12 பந்துகளில் அரைசதம் எட்டி யுவராஜ் சிங் அதிவேக டி20 அரைசத சாதனையையும் சமன் செய்தார். 6 சிக்சர்களை இவர் அடித்த பாணியும் கிட்டத்தட்ட யுவராஜ் சிங் ஸ்டைல்தான்!

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பால்க் லெஜண்ட்ஸ் அணியின் 245 ரன்கள் இலக்கை எதிர்த்து காபூல் ஸ்வானன் அணி ஆடிக்கொண்டிருந்த போது இன்னிங்சின் 4வது ஓவரில் அப்துல்லா மஜாரியின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார் ஹஸ்ரதுல்லா சேஸாய், ஒரு வைடு நீங்கலாக பாக்கி பந்துகள் மைதானத்துக்கு வெளியே.

“கிறிஸ் கெய்ல் என்னுடைய ஆஸ்தான வீரர் அவர் முன்னிலையில் இந்த ஆட்டம் எனக்கு பரமதிருப்தி அளிக்கிறது” என்கிறார் ஹஸ்ரத்துல்லா.

எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ராஸ் வைட்லி, ஹெர்ஷல் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோர் பட்டியலில் இணைந்தார் சேஸாய். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பட்டியலில் 3வது வீரராக சாதனை படைத்தார் சேஸாய்.

17 பந்துகளில் அவர் 62 ரன்கள் விளாசினாலும் காபூல் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதே போட்டியில் கிறிஸ் கெய்ல் ஏற்கெனவே எதிரணிக்காக 48 பந்துகளில் 2 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 80 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

ஒரே போட்டியில் 37 சிக்சர்கள் அடித்ததற்காகவும் இந்த டி20 முக்கியத்துவம் பெற்றுள்ளது, அதிக சிக்சர்கள் போட்டியில் இது 2வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x