Last Updated : 15 Oct, 2018 04:48 PM

 

Published : 15 Oct 2018 04:48 PM
Last Updated : 15 Oct 2018 04:48 PM

ஐசிசி தரவரிசை: அசைக்க முடியாத இடத்தில் கோலி; பிரித்வி ஷா, பந்த் சூப்பர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் அணிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 70, 33 ரன்கள் சேர்த்த இளம் வீரர் பிரித்வி ஷா பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி 60 இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஐசிசி தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் டெஸ்ட்போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சட்டீஸ்வர் புஜாரா 765 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த பிரித்வி ஷா டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கடந்த வாரம் இடம் பெற்றார். ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் 70, 33 ரன்கள் சேர்த்ததன் மூலம் தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். மற்றொரு வீரர் ரிஷாப் பந்த் 92 ரன்கள் சேர்த்ததன் மூலம் 23 இடங்கள் உயர்ந்து, 62-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அஜின்கயே ராஹனே 80 ரன்கள் சேர்த்ததன் மூலம் 4 இடங்கள் முன்னே சென்று, டாப் 20 வீரர்களில் 18-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் 4 புள்ளிகள் பெற்று 25-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். உள்நாட்டில் நடக்கும் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவை தவிர மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் கடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் செயல்பட்டார். இதன்மூலம் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஹோல்டர் 4 இடங்கள் முன்னேறி, 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்ங் தரவரிசையில் 3 இடங்கள் உயர்ந்து 53-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க பிலாண்டரை பின்னுக்குத் தள்ளிவிட்டு 3-வது இடத்தை ஹோல்டர் பிடித்துள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ராஸ்டன் சேஸ் பேட்ஸ்மேன் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹோப் 35-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x