Published : 13 Oct 2018 07:18 PM
Last Updated : 13 Oct 2018 07:18 PM

பிரித்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி; ரஹானே நிதானம்: இந்தியா 308/4

900 ரன்கள் பிட்சில் மே.இ.தீவுகள் ராஸ்டன் சேசின் அற்புதமான சதத்துடன் (106) 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே 174 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தும், ரிஷப் பந்த் 70% ஸ்ட்ரைக் ரேட்டில் 120 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 85 எடுத்தும் சதத்துக்குத் தயாராகி உள்ளனர்.

மே.இ.தீவுகள் அணியில் கேப்ரியல் 13 ஓவர்களில் 73 ரன்கள் விளாசப்பட்டார். பிஷூ 19 ஓவர்களில் 72 ரன்கள் வாரி வழங்கினார். ஜேசன் ஹோல்டர் தன் அனுபவத்தைக் காட்டி 45 ரன்களுக்கு 2 விக்கெட், இதில் பரிசு விக்கெட்டாக விராட் கோலி விக்கெட் கிடைத்தது. விராட் கோலி வழக்கம்போல் அனாயசமாக 78 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில். ஹோல்டரின் பந்தைக் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் கையை உயர்த்த இவர் உடனடியாக ரிவியூ கேட்காத போதே பந்து மட்டையில் படவில்லை என்பது திண்ணம். நேராக வாங்கி விட்டு ஒரு ரிவியூவையும் வேஸ்ட் செய்து வெளியேறினார், ஏதோ ஒரு முறை 2 முறை என்றால் பரவாயில்லை தனக்கு எல்.பி.கொடுக்கும்போதெல்லாம் ரிவியூ செய்வது நடுவரின் திறமைக்கு விடப்படும் சவாலாகும், இம்முறை ரிவியூ இவரைக் காப்பாற்றவில்லை, கைவிட்டது, ஜேஸன் ஹோல்டருக்கு பிரைஸ் விக்கெட்.

செதேஷ்வர் புஜாரா 10 ரன்களில் 2 தன்னம்பிக்கையான பவுண்டரிகள் அடித்தார், ஆனால் மீண்டும் இங்கிலாந்தில் ஆடியது போலவே கேப்ரியலின் சாதுவான ஒரு பந்துக்கு மட்டையை பந்தின் மீது தொங்க விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். மே.இ.தீவுகளுக்கு டவ்ரிச் பிட்சின் மோசமான பவுன்சில்னால் காயமடைந்து வெளியேற பதிலி விக்கெட் கீப்பர் ஹேமில்டன் பெரிய இடையூறாக இருந்தார். இவர் ரிஷப் பந்த்துக்கு ஆரம்பத்தில் கேட்ச் ஒன்றையும் விட்டார். ஆனால் அதன் பிறகு பந்த் கம்பீரமாக வெளுத்துக் கட்டினார்.

பிரித்வி ஷா அதிரடி, ராகுல் புஸ்...

இன்று காலை இந்திய அணி இன்னிங்ஸைத் தொடங்கியவுடன் ராகுல், பிரித்வி ஷாவின் அதிரடியை வேடிக்கைப் பார்க்க முடிந்தது. இவர் 4 ரன்கள் எடுப்பதற்குள் அவர் அடித்து ஆடத் தொடங்கிவிட்டார்.

கேப்ரியலின் முதல் ஓவரில் ராகுல் ஒரு பஞ்ச் ஷாட் மூலம் 3 ரன்கள் எடுக்க, ஒரு எகிறு பந்துக்கு திணறிய ஷா, அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் கட்டில் பவுண்டரிக்கு அனுப்பினார், அடுத்து ஒரு பெரிய நோ-பாலை வீச ஷா அதனை அப்பர் கட் செய்து தேர்ட்மேனில் சிக்சருக்கு அனுப்பினார். முதல் ஓவரிலேயே 15 ரன்கள். ஹோல்டரை ஒரு அற்புத கவர் ட்ரைவ் பவுண்டரி அடித்தார். மீண்டும் கேப்ரியல் காலில் குத்திக் காட்ட அப்படியே ஸ்கொயர்லெக்கில் தூக்கி அடித்தார் ஷா. பிறகு ஹோல்டரையும் ஒரு அனாயாச லெக் ட்ரைவ் மூலம் பவுண்டரி அடிக்க, அடுத்த ஓவர் ஸ்பின்னுக்குத் தாவினார் ஹோல்டர். 7 ஓவர்களில் 49 வந்தது. ஷா இதில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

இடது கை ஸ்பின்னர் வாரிகன் வந்தவுடன் சேவாக் பாணி ஒரு ஸ்லாக் ஸ்வீப் பவுண்டரி, கவர் பவுண்டரி, பிறகு மி ஆஃபில் மிஸ் பீல்ட் செய்ய ஒரு பவுண்டரி என்று 12 ரன்கள் வந்தது. 9வது ஓவரில் ராகுல், ஹோல்டர் பந்தை விடுவதா ஆடுவதா என்றி இருதலைக் கொள்ளி எறும்பாகி மட்டையைத் தொங்க விட பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. அதன் பிறகு 45 ரன்களில் பிரித்வி ஷாவுக்கு பிராத்வெய்ட் எளிதான கேட்சை ஸ்லிப்பில் கோட்டை விட்டார். அதன் பிறகு ஷா 39 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ச்சியாக 2வது டெஸ்ட்டிலும் அரைசதம். உணவு இடைவேளையின் போது 80/1 என்று வலுவாகச் சென்றது இந்திய அணி. ரன் விகிதம் ஓவருக்கு 5 ரன்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஷா, கேப்ரியலை 2 அற்புதமான ஆஃப் திசை பவுண்டரி விளாசினார். 17வது ஓவரில் வாரிகன் புல்டாஸை பவுண்டரி அடித்த ஷா, அடுத்ததாக இன்சைடு அவுட் போய் கவர் மேல் அடிக்க ஷா முயன்றார் பந்து கொஞ்சம் மெதுவாக தூக்கி வீசப்பட்ட பந்து நன்றாக இறங்கியது அடித்தார் கவரில் நேராக கேட்ச் ஆனது. ஷா, 53 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 70 ரன்கள் அதிரடி இன்னிங்ஸுடன் வெளியேறினார்.

ஷா அவுட் ஆனவுடன் மே.இ.தீவுகள் ரன் வேகத்தை முடக்கியது. கோலி இறங்கியவுடன் அடுத்ததாக புஜாரா 10 ரன்களில் கேப்ரியல் பந்துக்கு காலை நகர்த்தாமல் மட்டையை மட்டும் தொங்க விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். 102/3 என்று ஆன நிலையில் ரஹானே கோலி இணைந்தனர். கோலி வாரிகன் பந்தில் இருமுறை தடவினார், ஒருமுறை உள்ளே வந்த பந்தை ஆடாமல் விட்டார், இன்னொரு முறை லெக் திசையில் அடிக்க முயன்ற போது முன் விளிம்பில் பட்டு பந்து மிட் ஆஃபுக்கு வந்தது. ரன்கள் வறட்சி கண்டது. 22வது ஓவரில் ரஹானே பவுண்டரியுடன் காணாமல் போன பவுண்டரி 34வது ஓவரின் 6வது பந்தில்தான் மீண்டும் வந்தது. 45 ரன்களில் கடைசியில் கோலி, ஹோல்டர் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். தேநீர் இடைவேளையின் போது 173/4 என்று இருந்தது இந்திய அணி. மே.இ.தீவுகள் நன்றாக ஒரு செஷனில் வீசினர்.

அதன் பிறக பந்த், ரஹானே மேலும் சரிவு ஏற்படாமல் ஆடினர், ரிஷப் பந்த்துக்கு ஒருகேட்ச் ஆரம்பத்தில் விடப்பட்டது, பிறகு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பிலும் தப்பினார். ரஹானே, பந்த் இருவரும் சேர்ந்து 38 ஓவர்களில் ஆட்டமிழக்கமாமல் 146 ரன்களைச் சேர்க்க இந்திய அணி 308/4 என்று உள்ளது. நாளை 3ம் நாள், ரஹானே, பந்த் சதங்களை எதிர்நோக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x