Published : 12 Oct 2018 06:52 PM
Last Updated : 12 Oct 2018 06:52 PM

சுமார் 50 ஓவர்கள் மெய்டன் இல்லாமல் பேட் செய்த மே.இ.தீவுகள்: சதம் நோக்கி சேஸ்; மே.இ.தீவுகள் 295/7

ஹைதராபாத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியினி முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி முதுகெலும்புடன் ஆடி 7விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.

சுருக்கமாக ஷேய் ஹோப், டவ்ரிச் எப்படி ஆட வேண்டுமென்று காட்ட பிறகு ராஸ்டன் சேஸ் (98), கேப்டன் ஹோல்டர் (52) ஆகியோர் சிறப்பாக ஆடி 2வது புதிய பந்துக்கு அரிதாக இன்னிங்ஸை எடுத்துச் சென்றனர்.

40வது ஓவர் மெய்டன் ஆன பிறகு 93வது ஓவர்தான் மெய்டன் ஆனது. இடைப்பட்ட ஓவர்களில் சிங்கிள்கள், இரண்டுகள் அவ்வப்போது அரிதான பவுண்டரிகள் என்று மே.இ.தீவுகள் ஸ்கோர் போர்டை நகர்த்திச் சென்றனர்.

ஏற்கெனவே ராஸ்டன் சேஸ் இந்திய அணியை மே.இ.தீவுகளில் படுத்தி எடுத்து ஒரு போட்டியை ட்ரா செய்துள்ளார், இந்தத் தொடரிலும் அவர் 2 டெஸ்ட் போட்டிகளாக அருமையாக ஆடி வருகிறார், அவர் ஆட்ட முடிவில் 98 நாட் அவுட். பிஷூ 2 நாட் அவுட். உமேஷ் யாதவ் காலையில் மோசமாகத் தொடங்கி பிறகு பழைய பந்தில் 2 விக்கெட்டுகளையும் 2வது புதிய பந்தில் அரைசதம் எடுத்த அபாய வீரர் ஜேசன் ஹோல்டரையும் வீழ்த்தி மீண்டெழுந்து 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த அஸ்வின் ஓவருக்கு 2.01 என்ற சிக்கனவிகிதத்தில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கெய்ரன் போவெல், ஷிம்ரன் ஹெட்மையர், சுனில் அம்ப்ரீஸ் ஆகியோர் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட நினைத்தனர், ஆனால் கட்டுப்பாடான ஆக்ரோஷம் தேவை, சிங்கிள்கள் தேவை, ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வது தேவை, இவையெல்லாவற்றையும் மறந்து ஏதோ அஸ்வினையும், குல்தீப்பையும் அட்டாக்கை விட்டே தூக்குகிறோம் பார் என்று ஆடியதால் போவெல் அஸ்வினிடமும் மற்ற இருவர் குல்தீப்பிடமும் வீழ்ந்தனர்.

ஷேய் யோப் பிரமாதமாக ஆடினார், ஆனால் அவர் உமேஷ் திரும்பி வந்த போது எல்.பி.ஆனார். ரிவியூவையும் இழக்கச் செய்தார். அம்ப்ரீஸ் அவுட்டுடன் 113/5 என்று சரிவு முகம் கண்ட போது ஷேன் டவ்ரிச், ராஸ்டன் சேஸ் இணைந்து 69 ரன்களை முக்கியமாகச் சேர்த்தனர், 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் ஆடிவந்த டவ்ரிச் உமேஷ் யாதவ்வின் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

சேஸ் அற்புதமாக தவறே செய்யாமல் ஆடினார், முன்னால் வந்து ஆட வேண்டிய பந்துகளை முன்னால் வந்தும் பின்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் வந்தும் ஆடி 80 பந்துகளில் அரைசதம் கண்டார். ஜேசன் ஹோல்டர் ஒரு புவர் மேன்ஸ் கபில்தேவ், அவர் தன் கேப்டன்சி பொறுமையைக் காட்டி 85 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார், ஆனால் கடைசியில் உமேஷ் யாதவ் பந்தில் லெக் திசையில் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ராஸ்டன் சேஸ் 174 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 98 ரன்கள் எடுத்து அருமையான ஒரு சதத்துக்காகக் காத்திருக்கிறார். மே.இ.தீவுகள் 350 ரன்களை எடுத்து இந்திய டாப் ஆர்டரை 100 ரன்களுக்குள் கழற்றினால் இது ஒரு சுவாரசியமான டெஸ்ட் போட்டியாக மாறும், இல்லையெனில் மீண்டும் ஒரு தோல்வியைத்தான் மே.இ.தீவுகள் சந்திக்க நேரிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x