Published : 10 Oct 2018 05:42 PM
Last Updated : 10 Oct 2018 05:42 PM

இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா மீது இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் புகார்

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணிப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னிடம் ரணதுங்கா எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார் என்பதையும், எப்போது நிகழ்ந்தது என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரைப் பாதுகாப்பு கருதி மறைத்து இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது, இலங்கை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கத் தனது தோழிகளுடன் சென்றபோது, ரணதுங்கா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அப்போது அவர் என்னை மிரட்டியும், தாக்கியும் என்னை பலவந்தப்படுத்தினார். ஆனால், அங்கிருந்து நான் தப்பிவந்து ஹோட்டலில் உள்ள வரவேற்பறை பணியாளர்களிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன்.

ஆனால், அந்தப் பணியாளர்கள், உன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர் என்று அந்தப் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டனாக அர்ஜுனா ரணதுங்கா புகழப்பட்டு வருகிறார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரணதுங்கா 5,105 ரன்களும், 260 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,456 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x