Published : 03 Oct 2018 08:50 PM
Last Updated : 03 Oct 2018 08:50 PM

ரன் அவுட் மன்னர் அஞ்சேலோ மேத்யூஸ்: அடுத்த இடங்களில் டிவில்லியர்ஸ், தோனி

பொதுவாக ரன் அவுட் என்றாலே பாகிஸ்தானின் இன்ஜமாம் உல் ஹக் நினைவுதான் வரும். ஆனால் இலங்கை பயிற்சியாளர் அன்று அஞ்சேலோ மேத்யூஸை அணியிலிருந்து நீக்கியதற்குக் காரணமாக 65 ரன் அவுட்கள் மேத்யூசின் உலக சாதனை என்று தெரிவித்து அதிர்ச்சியளித்தார்.

மேத்யூஸ் 3 கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து 65 ரன் அவுட்களுக்குக் காரணமாக இருந்துள்ளார், அதில் 49 முறை தன் கூட்டாளியை ரன் அவுட் செய்துள்ளார் இது உலக சாதனை என்று பயிற்சியாளர் ஹதுர சிங்கவும், தேர்வாளர் கிரேம் லெப்ராயும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தின் புள்ளி விவர ஆய்வுக்கட்டுரை ஒன்றில், ஆஞ்சேலோ மேத்யூஸுக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏ.பி.டிவிலியர்ஸும் இந்திய அணியின் உலகின் தலைசிறந்த பினிஷர் தோனியின் பெயரும் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் 65 ரன் அவுட்களுடன் மேத்யூஸ் முதலிடம் வகிக்க 48 ரன் அவுட்களுடன் டிவில்லியர்ஸ் 2ம் இடத்திலும் 44 ரன் அவுட்களுடன் தோனி 3ம் இடத்திலும், 43 ரன் அவுட்களுடன் ராஸ் டெய்லர் 4ம் இடத்திலும் 41 ர அவுட்களுடன் இலங்கையின் திலக ரத்ன தில்ஷான் 5ம் இடத்திலும் உள்ளனர்.

ஆனால் இதே புள்ளிவிவர ஆய்வுக்கட்டுரையில், கட்டுரையாளர் மிகவும் விரிவாக, ஆழமான புள்ளிவிவர ஆய்வு மேற்கொண்டு இந்த ரன் அவுட்கள் ஏன் என்பதையும் ஆராய்ந்து கூறமுற்படும்போது, தோனி, மேத்யூஸ், அல்லது கிறிஸ் ஹாரிஸ், மைக்கேல் பெவன் என்று யாராக இருந்தாலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவர்கள் போட்டியின் மிகவும் கெடுபிடியான தருணங்களில் இறங்கி பொதுவாக கீழ்வரிசை வீரர்களுடன் ஆட வேண்டியுள்ளது, இவர்கள் பினிஷர்கள், விக்கெட்டையும் இழக்காமல் ரன் விகிதத்தையும் உயர்த்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது, இதனால் வேகமாக ரன்கள் ஓடியே ஆக வேண்டியதுள்ளது. இவர்கள் தங்களை ஸ்டரைக்கில் வைத்துக் கொள்ள நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டியுள்ளது. மேலும் இவர்கள் விக்கெட்டுகள் அணிக்கு மிக முக்கியமானது. இதில் சில தருணங்களில் இவர்களோ, எதிர்முனை வீரரோ ரன் அவுட் ஆக நேரிடுகிறது என்று கூறியுள்ளார்.

எனவே இந்தக் காரணத்தைக் காட்டி ஒருவரை அணியிலிருந்து தூக்குவது சற்றே கறாரான முடிவுதான் என்பதை நமக்கு அந்தக் கட்டுரை உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x