Published : 03 Oct 2018 07:54 PM
Last Updated : 03 Oct 2018 07:54 PM

24 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்துமா மே.இ.தீவுகள்? புறந்தள்ள முடியாத பேட்டிங்: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்தியா

 

மே.இ.தீவுகள் வியாழனன்று ராஜ்கோட்டில் இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. 1994ம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இங்கு சண்டிகாரில் வென்றது மே.இ.தீவுகள்.

அதன் பிறகு 8 டெஸ்ட் போட்டிகளில்தான் மே.இ.தீவுகள் இங்கு ஆடியுள்ளது. ஆனால் சில பேட்ஸ்மென்கள் அங்கு கொஞ்சம் உறுதி காட்டத் தொடங்கியுள்ளனர், இதில் தொடக்க வீரர்களான பிராத்வெய்ட், போவெல், ஷேய் ஹோப், ராஸ்டன் சேஸ், அபாய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஷேன் டவ்ரிச், கேப்டன், ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்பது எதிர்பார்க்க முடியாதது.

இதில் பிராத்வெய்ட், ஷேய் ஹோப் இருவரும் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக சமீபத்தில் புகழ்பெற்ற ஒரு வெற்றியை ஈட்டித் தந்துள்ளனர். அதே போல் ஜேசன் ஹோல்டர் பின்னால் இறங்கி முக்கியமான பங்களிப்புகளை டெஸ்ட் போட்டியில் செய்துள்ளார். விக்கெட் கீப்பர் டவ்ரிச் ஒரு அபாயகரமான பேட்ஸ்மென் ஆவார். பவுலிங்கில் கிமார் ரோச் இல்லாதது இந்திய அணிக்கு நிம்மதிப் பெருமூச்சு ஆனால் அதே வேளையில் சவாலான பந்து வீச்சை இழக்கின்றனர். பிட்ச் ஆஸி.தொடருக்கு ஏதுவாக பவுன்ஸ் உள்ளதாக அமைக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி போடப்பட்டால் ஷனன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், கீமோ பால் என்ற இளம் வேகப்புயல் ஆகியோர் இங்கிலாந்தில் அடிபட்டு உதைபட்டு வந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு சவாலாகவே திகழ்வார்கள். இதுதவிர லெக் ஸ்பின்னில் தேவேந்திர பிஷூ, ராஸ்டன் சேஸ் உள்ளனர். இவர்கள் தவிர அதிரடி பேட்ஸ்மென் சுனில் அம்ப்ரீஸ் என்பவரைக் களமிறக்குகின்றனர். எனவே மே.இ.தீவுகள்தானே என்று புறந்தள்ளி விட முடியாது என்றே தோன்றுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரிதிவி ஷா அறிமுகம்:

மாறாக இந்திய அணியில் மிகுந்த தொடக்கத்தில் சேவாக்குக்குப் பிறகு ஒரு அனாயாச அதிரடி பேட்ஸ்மெனை ரசிகர்களுமே ஆவலாக எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். சேவாக் அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரிதிவி ஷா தன்னளவில் ஒரு அதிரடி வீரர் என்ற பெயருடன் நாளை களம் காண்கிறார். இவரும் மயங்க் அகர்வாலும் இந்தியா ஏ அணிக்காக பல அதிரடி தொடக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

செடேஸ்வர் புஜாரா 191 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டுவார். ராகுல் 189 எடுத்தால் 2000 ரன்களை எட்டுவார். ராகுல், பிரிதிவி ஷா தொடக்க வீர்ர்களாகக் களம் காண்பார்கள். மே.இ.தீவுகளுக்கு பெரிய சவால் விராட் கோலிதான், இங்கிலாந்தில் 593 ரன்களை இரு அணிகளுக்கும் சேர்த்தே டாப் ஸ்கோரராக முடிந்தார். மே.இதீவுகளில் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். எனவே விராட் கோலி அவர்களுக்கு ஒரு பெருத்த சவால்.

பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் இந்த பிட்ச்களில் பெரிய அச்சுறுத்தல், 2-3 மணி நேரங்களில் பெரிய பெரிய தலைகளையெல்லாம் அவர்கள் இங்கு உருட்டியுள்ளனர், குழிபிட்ச் போடாதிருந்தால் மே.இ.தீவுகள் பிழைக்கும். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர், பும்ரா இல்லாததும் மே.இ.தீவுகளுக்கு ஒரு அனுகூலமே, ஆனால் மொகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற பவுலர்களும் மே.இ.தீவுகளுக்கு அச்சுறுத்தல்தான், மொகமது ஷமியின் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெல்லை மே.இ.தீவுகள் இன்னமும் மறந்திருக்க மாட்டர்கள்.

இந்திய அணி: ராகுல், பிரிதிவி ஷா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாக்குர்.

மே.இ.தீவுகள்: கிரெய்க் பிராத்வெய்ட், கெய்ரன் போவெல், ஷேய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஹெட்மேயர், ராஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், பிஷூ, ஷனன் கேப்ரியல்

நாளை ஆட்டம் 9.30 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x