Last Updated : 03 Oct, 2018 02:31 PM

 

Published : 03 Oct 2018 02:31 PM
Last Updated : 03 Oct 2018 02:31 PM

‘எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லை’: கருண் நாயர் விவகாரத்தில் வெடித்த விராட் கோலி

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கும், இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படாததற்கும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, அனைத்து முடிவுகளும் ஒரு இடத்தில் இருந்து எடுக்கப்படுவதில்லை என்று கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள், இந்திய அணி ஆகியவற்றுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் விளையாடும் 12 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், பிரித்விஷா ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பல்வேறு விவாதங்களும், குழப்பமான அறிக்கைகளும் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 12 பேர் கொண்ட அணி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிறப்பாக விளையாடக்கூடிய கருண் நாயர் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து தொடர் ஆகியவற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், வாய்ப்பு அளிக்கப்படாமலே மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று மூத்த வீரர்கள் ஹர்பஜன் சிங், சேவாக்,கங்குலி ஆகியோர் விமர்சித்தனர். இதுதொடர்பாக தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தனிப்பட்ட முறையில் கருண் நாயரைத் தொடர்பு கொண்டு பேசுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்துக்கும், விராட் கோலிக்கும் இடையிலான உரசல் காரணமாகவே தேர்வுக்குழு தேர்வு செய்த கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் பேசப்பட்டது.

இது குறித்து ராஜ்கோட்டில் கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''கருண் நாயர் ஏன் மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ஏற்கெனவே தேர்வுக்குழுவினர் பேசிவிட்டார்கள். இதில் நான் சொல்வதற்கு ஏதும் இல்லை. தேர்வுக்குழுவினர் அவர்களின் வேலையைச் செய்திருக்கிறார்கள். வெளியில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். அதைக் கவனத்தில் கொள்ளாமல், உங்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதில் ஈடுபட்டு பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே ஒருவர் இது குறித்துப் பேசிவிட்டால், மீண்டும் அதைப் பற்றி இங்குப் பேசக்கூடாது. எனக்குத் தெரிந்தவரை தேர்வுக்குழுத் தலைவர் கருண் நாயரிடம் பேசிவிட்டார். ஆதலால், இந்த விஷயத்தில் நான் கருத்து சொல்வதில் நியாயமில்லை.

மற்றொரு விஷயம் வீரர்கள் தேர்வு என்பது என்னுடைய பணி அல்ல. எங்களுக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதை ஒரு அணியாகச் செய்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணி குறித்து அறிந்திருக்க வேண்டும்.

கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வீரர்கள் தேர்வு என்பது அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு அல்ல. எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்து, ஒரு இடத்தில் இருந்து வீரர்கள் தேர்வு நடக்கிறது, முடிவு எடுக்கப்படுகிறது என்று நினைக்கிறார்கள் அது தவறானது. எனக்கும் கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கும் தொடர்பு இல்லை''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x