Published : 03 Oct 2018 09:22 AM
Last Updated : 03 Oct 2018 09:22 AM

கோலியின் இணையதளத்தை ஹேக் செய்த வங்கதேச ரசிகர்கள்:லிட்டன் தாஸ் அவுட்டுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸுக்கு கொடுக்கப்பட்ட அவுட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வங்கதேச ரசிகர்கள் நேற்று ஹேக் செய்தனர்.

அதில் லிட்டன் தாஸுக்கு கொடுக்கப்பட்ட அவுட்டுக்கு ஐசிசியும், நடுவர்களும் மன்னிப்பு கோர வேண்டும் என்று வங்கதேசத்தின் சிஎஸ்ஐ(CSI) ஹேக்கிங் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது, இடுப்புக்கு மேல் பந்துசென்றதால் நோபால் கொடுக்கப்பட்டது.அப்போது தொடங்கிய வங்கதேச அணியினரின் சர்ச்சை ஒவ்வொரு முறையும், இந்தியாவுடன் மோதும்போதும் ஏதாவது சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். இது ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிலும் தொடர்ந்தது.

ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியின் போது, முதலில் பேட் செய்த வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் நல்ல பார்மில் இருந்து இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 116 பந்துகளைச் சந்தித்து 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

குல்தீப் பந்து வீசுகையில், ஆப்சைட் விலகிக் சென்ற பந்தை அடிக்க முற்பட்டபோது, தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் ஆட்டமிழக்கும்போது வங்கதேச அணி 41 ஓவர்களில் 188 ரன்களுக்கு 6 விக்கெட் என இருந்தது. ஆனால், அதன்பின் மளமளவென விக்கெட்டுகள் சரிந்து 48.4 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லிட்டன் தாஸ்க்கு வழங்கப்பட்ட அவுட்தான் தற்போது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. அவருக்கு மட்டும் அவுட் கொடுக்கப்படவில்லை என்றால், வங்கதேசத்தின் ஸ்கோர் 250 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும்.

லிட்டன் தாஸ் பந்தை அடிக்க முற்பட்டபோது அது விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சமடைந்து அவர் ஸ்டெம்பிங் செய்தார். ஆனால், மூன்றாவது நடுவரோ பல முறை பல கோணங்களில் பார்த்து அதை அவுட் என்று உறுதி செய்தார்.

 

ஆனால், லிட்டன் தாஸ்க்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டுவிட்டது என்று வங்கதேச ரசிகர்கள் மிகுந்த கொந்தளிப்படைந்தனர். ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும்(பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலையும்(ஐசிசி) கடுமையாகச் சாடி ட்விட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டனர். இந்த பிரச்சினை ட்விட்டரோடு முடிந்தவிட்டது என நினைக்கையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதளத்தை வங்கதேசத்தின் சைபர் செக்யூரிட்டி இன்டலிஜென்ஸ்(சிஎஸ்ஐ) ஹேக் செய்துள்ளதாக வங்கதேசத்தின் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இணையதளத்தை ஹேக்கிங் செய்து ஐசிசிக்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். அதில் ஜென்டில்மேன் விளையாட்டு கிரிக்கெட் என்பதை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லையே. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொருவிதமான நியாயம் இருக்கக்கூடாது. எப்படி அது அவுட் என்று கூறுங்கள். நீங்கள் வெளிப்படையாக அந்த அவுட்டுக்கு இந்த உலகத்தின் முன் மன்னிப்பு கோராவிட்டால், நடுவர்களும் மன்னிப்பு கேட்காவிட்டால், ஒவ்வொரு முறையும் நாங்கள் இணையதளத்தை முடக்குவோம்.

எங்களுடைய சக இந்திய சகோதர, சகோதரிகள் இதை மரியாதைக்குறைவாக நினைக்காதீர்கள். உங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x