Last Updated : 30 Sep, 2018 01:32 AM

 

Published : 30 Sep 2018 01:32 AM
Last Updated : 30 Sep 2018 01:32 AM

‘வீரர்களுக்கு உத்தரவாதம் தேவை’- அணியின் முழு நேர கேப்டனாக இருக்க தயார்; ஆசிய கோப்பையை வென்ற பின்னர் ரோஹித் சர்மா உற்சாகம்

இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக பதவி ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். தலைமைப்பண்பில் மிகவும் முக்கியமானது, வீரர்களுக்கு அளிக்கும் உத்தரவாதம். அதை நான் செய்தேன் என நம்புகிறேன் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 7-வது முறையாக கோப்பையை வென்றது. 223 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி திக்கித்திணறி ஆட்டத்தின் கடைசி பந்தில்தான் வெற்றி பெற்றது. ஷிகர் தவண் (15), அம்பதி ராயுடு (2) அடுத்தடுத்து வெளியேற கேப்டன் ரோஹித் சர்மா தன் பங்கிற்கு 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். படுமந்தமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 37, தோனி 36 ரன்களில் வெளியேற இந்திய அணி 36.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இதற்கிடையே தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேதார் ஜாதவும் வெளியேறினார். இதன் பின்னர் ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் ஜடேஜா 23, புவனேஷ்வர் குமார் 21 ரன்களில் ஆட்டமிழக்க மீண்டும் நெருக்கடி உருவானது. இந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். அவருக்கு உறுதுணையாக குல்தீப் யாதவும் விளையாட கடைசி பந்து வரை ரசிகர்களை பரபரப்புடனே வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஜாதவ் 23, குல்தீப் யாதவ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக 121 ரன்கள் விளாசிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸூம், தொடர் நாயகனாக 342 ரன்கள் சேர்த்த ஷிகர் தவணும் தேர்வு செய்யப்பட்டனர்.

பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி, கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் இலங்கையில் நடந்த நிடாஹாஸ் டி 20 தொடரையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா கோப்பையை பெற்றுக்கொடுத்து தலைமைப் பண்பில் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். ஆசியக் கோப்பையை 7-வது முறையாக வென்றபின் ஊடகங்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்திய அணிக்கு முழு நேர கேப்டனாக செயல்பட தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

உண்மையாக நான் தயாராக இருக்கிறேன். இதில் என்ன தயக்கம் இருக்கிறது. என் தலைமையில் கோப்பையை வென்றுள்ளோம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் கேப்டன் பொறுப்பு ஏற்கத்தயாராக இருக்கிறேன். சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கும் போது எந்த அணிக்கும் அது சவால்தான்.

அவர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவார்கள், இதனால் சில வீரர்கள் வெளியே செல்வார்கள். அனைத்து அணிகளும் இதை செய்கின்றன. அதை வீரர்களும் புரிந்து கொள்கின்றனர்.

எப்போதெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அதை அவர்கள் பெரிய அளவில் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நானும், அணியின் பயிற்சியாளரும் வீரர்களுக்கு முழுமையான சுதந்திரம் அளித்தோம், ஒவ்வொரு வீரருக்கும் உறுதியளித்து, எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட உத்தரவாதம் அளித்தோம். அணியின்இயக்கத்தை நான் புரிந்துகொண்டுள்ளேன்.

எந்த வகையில் எங்களது கிரிக்கெட்டை விளையாட வேண்டும, ஒரு அணியாக எப்படி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்துள்ளேன். இந்தத் தொடரை நாங்கள் முழுமையாக நிறைவு செய்துள்ளோம்.

துபாய் வந்த உடனே தினேஷ்கார்த்திக், அம்பதி ராயுடு ஆகியோரிடம் நீங்கள் இருவரும் இந்ததொடர் முழுவதும் விளையாடுவீர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடுங்கள் என்றுஉறுதியளித்துவிட்டேன். இப்படித்தான் வீரர்களை நாம் உருவாக்க வேண்டும்.

இரு போட்டிகளுக்கு நீங்கள் நீக்கப்படுவீர்கள் என அறிந்தால், எந்த வீரருக்கும் எளிதாக இருக்காது. அனைத்து வீரர்களுக்கும் சமமான அளவில்விளையாட வாய்ப்பும் கொடுத்தேன். இது வீரர்களின் திறமையை எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. ஒரே போட்டியை மட்டும் வைத்து ஒரு வீரரின் திறமையை தீர்மானித்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரை இன்னும் இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் 4-வது மற்றும் 6-வது இடத்துக்கு சரியான வீரர்கள் அமையவில்லை.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக மேலும் பல போட்டிகள் உள்ளன. அதற்குள் சரியான வீரர்கள் அமைந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இப்போதே அதைப்பற்றிப் பேச சரியான நேரம் இல்லை. உலகக் கோப்பை தொடருக்குள் தெளிவான நிலைப்பாடை பெறுவோம். அடுத்து வரும் சில தொடர்கள் நாம் கவலைப்படும் இடத்துக்கான வீரர்களைக் கண்டுபிடிக்க சரியான வாய்ப்பாக அமையும்.

இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணி ஆசியக் கோப்பையை வென்றதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த காலநிலை மிகவும் வெப்பமானது. இங்கிலாந்தில் இருந்து வந்துவிட்டு, திடீரென அதிகமான வெயிலில் நின்று விளையாடுவது எளிதானது அல்ல. இந்த தொடருக்காக நாங்கள் தயாராகிய விதம் சரியாக இருந்தது.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டனர். இறுதிப் போட்டியில் வங்கதேச அணி தொடக்கத்தில் வலுவாக இருந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 8 மாதங்

களாகவே இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகின்னர்.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x